இயற்கை வழிபாட்டில் முதன்மையான சூரிய வழிபாடு!!
சிவ ஆகமங்களில் சூரிய மண்டலத்தின் நடுவே சிவபெருமான் உறைந்திருப்பதாக கூறுகின்றன. சூரியன் சிவனின் அஷ்டமூர்த்தங்களில் ஒருவராகவும், வலது கண்ணாகவும் இருக்கிறார். அதனால் தான் சைவர்கள் “சிவசூரியன்’ என்று போற்றுகின்றனர்.
சூரியனின் தேர் தெற்கில் பயணிக்கும் காலத்தை தட்சிணாயனம் என்றும், வடக்கு நோக்கி பயணிக்கும் காலத்தை உத்ராயணம் என்றும் கூறுவர். தை மாதம் சூரியனின் தேர் பாதை தெற்கிலிருந்து வடக்கு நோக்கி மாறும் அன்றைய நாளுக்கு "ரதசப்தமி" என்று பெயர். அன்று சூரியனை வழிபட்டால், சகல சௌபாக்கியங்கள் கிட்டும்.
ஸ்ரீ ராமசந்திரமூர்த்தி உலகின் நலனைக் கருதி ராவணனை வெல்ல முயன்றபோது ஸ்ரீ ராமனுக்கு கவசமாக, பாதுகாப்பாக, ஆதித்ய ஹ்ருதயத்தை அகஸ்தியர் உபதேசித்தார்.
வேதியர்கள் தினமும் ஓதும் காயத்ரி மந்திரம் சூரியனுக்குரியதே. ஆதித்ய ஹ்ருதயமும் காயத்ரி மந்திரமும் நமக்கு சிறந்த ஆரோக்கியத்தையும் அறிவுத் திறனையும் வாழ்வில் வெற்றியையும் கொடுக்கக் கூடியவையாகும்.
இந்தியாவில் சூரியனுக்கென்று தனியே ஒருசில ஆலயங்களே உள்ளன. இவற்றுள் மிக முக்கியமானது, ஒரிசாவில் கோனார்க், கயாவில் தட்சிணார்க்கா, ஆந்திராவில் அரசவல்லி, குஜராத்தில் மொதேரா, அஸ்ஸலமில் சூர்யபஹார், மத்திய பிரதேசத்தில் உனாவோ, கேரளாவில் ஆதித்யபுரம், காஷ்மீர், ஸ்ரீநகரில் 2000 ஆண்டுகள் பழைமையான “மார்த் தாண்டா’ ஆலயம் ஆகியவையாகும்.
நம் ஆரோக்கியத்துக்கும் அதிபதியாக இருப்பவர் சூரிய பகவான்! ‘சுகத்துக்கு சூரிய பகவானை வணங்கு’ என்று மந்திர சாஸ்திரங்கள் சொல்கின்றன.
காலை 7 மணிக்குள்ளும் மாலை 5 மணி முதல் 6 மணிக்குள்ளும் சூரிய வெளிச்சத்தில், சிறிது நல்லெண்ணெயை உடல் முழுவதும் தடவிக் கொண்டு, ஒரு மணி நேரம் அமர்ந்திருந்தால் நெடுநாட்களாக நம்மை விட்டு விலகாத நோய்கள் குணமாகி விடும்.
சூரிய வழிபாட்டு முறையைக் கடைப்பிடிக்கும் சீனர்களும் ஜெர்மானியர்களும் தங்கள் வாழ்நாளை அதிகப்படுத்திக் கொள்கின்றனர். நல்ல ஆரோக்கியத்துடன் திகழ்பவர்கள் மட்டுமல்லாமல், நீண்ட நாட்களாக தீராத வியாதியால் அவதிப்படுகிறவர்களும், பூப்படையாத பெண்களும், முக்கியமாக கண்பார்வை மங்கியவர்களும் ஞாயிற்றுக் கிழமைதோறும் இந்த வழிபாட்டைச் செய்வது மிகவும் நல்லது.