திங்கள், 27 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala
Last Modified: வியாழன், 9 டிசம்பர் 2021 (10:26 IST)

ஓரை அறிந்து நடப்பவனை யாரும் ஜெயிக்க முடியாது ஏன் தெரியுமா....?

ஓரை அறிந்து நடப்பவனை யாரும் ஜெயிக்க முடியாது என்பது சித்தர்கள் வாக்கு. ஒன்பது கிரகங்களில் ஏழு கிரகங்களுக்கு மட்டுமே ஓரை உண்டு. 
 
ராகு, கேது சாயா கிரகங்கள் என்பதாலும், அவற்றிற்கு சுற்றுப்பாதை இல்லாத காரணத்தாலும் அவற்றிற்கு ஓரை கிடையாது.
 
 
பூமத்திய ரேகை, தீர்க்க ரேகை ஆகியவற்றை நமது முன்னோர்கள் எப்படி உருவாக்கினார்களோ அதேபோல்தான் ஓரைகளும் உருவாக்கப்பட்டன. சூரியனின் சுற்றுப்பாதை, சூரியனுக்கு அருகில் இருக்கக் கூடிய கிரகங்கள், தொலைவில் இருக்கக் கூடிய கிரகங்கள், அதனுடைய ஈர்ப்பு சக்தி, அதன் ஒளிக்கற்றைகள் பூமியை அடைவதற்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கான கால நேரம் இதை எல்லாம் அடிப்படையாக வைத்துதான் நமது முன்னோர்கள் ஓரைகளை கணக்கிட்டுள்ளனர். 
 
 
சூரியன் மற்றும் அதன் அருகே அல்லது தொலைவில் உள்ள கிரகங்களின் அமைப்பைக் கொண்டு வானவி யல் அறிஞர்கள் ஓரைகளை உருவாக்கினர். இதன்படி வாரத்தின் முதல் நாளான ஞாயிறன்று முதல் ஓரையை சூரியனுக்கு அளித்தனர். அதற்கு அடுத்து சுக்கிரன் , அதற்கு அடுத்து புதன் ஓரை , 4வது இடம் சந்திரனுக்கும், 5வது இடம் சனிக்கும், 6வது இடம் குருவுக்கும், 7வது இடம் செவ்வா ய்க்கும் வழங்கினர்.
 
 
இதற்கு சுற்றுப்பாதை, கிரகங்களின் கதிர் வீச்சுதான் காரணம்.இவற்றில் சுக்கிரன் ஓரை, புதன் ஓரை, குரு ஓரை ஆகிய மூன்றும் நல்ல ஓரைகள் எனப் படுகிறது. எந்த ஒரு நல்ல காரியம் செய்ய வேண்டுமென்றாலும் - இந்த ஹோரைகளில் துவங்கலாம். ஓரை என்பது சூரிய உதயத்தில் இருந்து கணக்கிடப்படுகிறது. அந்த நாளின் கிழமை அதன் முதல் ஓரையாக கொள்ளப்படுகிறது. 
 
 
உதாரணமாக ஞாயிறு காலை முதல் ஒரு மணி நேரம் (6-7 மணி) சூரியனின் ஓரை. இதையடுத்து 7-8 மணி வரை சுக்கிரன் ஓரை, 8-9 மணி வரை புதன் ஓரை, 9-10 வரை சந்திரன் ஓரை, 10-11 வரை சனி ஓரை, 11-12 மணி வரை குரு ஓரை, 12-1 மணி வரை செவ்வாய் ஓரை. இதையடுத்து மீண்டும் சூரியன் ஓரை துவங்கும். இதேபோல் செவ்வாய்க்கிழமை என்றால் அன்று காலை 6 முதல் 7 மணி வரை செவ்வாய் ஒரை, புதன் கிழமை என்றால் காலை 6-7 மணி வரை புதன் ஓரை, அதன் பின் ஒவ்வொரு மணி நேரமும் மேலே கூறப்பட்டுள்ள வரிசைப்படி ஓரை கணக்கிடப்படும்.
 
 
பொதுவாக காலை 6 மணி என்பதனை சராசரி சூரிய உதய நேரமாகக் கொண்டுதான் ஓரைகள் கணக்கிடப்படுகின்றன. 6 - 1 - 8 - 3 இந்த வரிசையை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். காலை 6 மணிக்கு வரும் ஓரை, திரும்பவும் மதியம் 1 மணிக்கும், இரவு 8 மணிக்கும் , பின்பு அதிகாலை 3 மணிக்கும் வரும்.