வடக்கு திசையில் தலை வைத்துப் படுக்கக்கூடாது ஏன் தெரியுமா...?
எந்த திசையில் தலை வைத்துப் படுக்கவேண்டும் என்பதை சித்தர்கள் கூறியுள்ளனர். அதன்படி, உத்தமம் கிழக்கும், ஓங்குயிர் தெற்கு, மத்திமம் மேற்கு, மரணம் வடக்கு.
கிழக்குத் திசையில் தலை வைத்துப் படுப்பதே நல்லது என்கின்றனர் சித்தர்கள். ஆனால் நீண்ட ஆயுளைப் பெற தெற்குத் திசையில் தலை வைத்துப் படுப்பது நல்லது, மேற்கு திசையில் தலை வைத்துப் படுப்பதால் கனவுகள், அதிர்ச்சி போன்றவை உண்டாகும்.
வடக்கு திசையில் ஒருபோதும் தலைவைத்துப் படுக்கக்கூடாது. இதனை விஞ்ஞான ரீதியாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர். வடதிசையில் வரும் காந்த சக்தி நம் தலையில் மோதும்போது அங்குள்ள பிராண சக்தியை இழக்கும். இதனால் மூளை, பாதிக்கப்படுவதுடன் இதயக் கோளாறுகள், நரம்புக் கோளாறுகள் ஏற்படும்.
பூமியையே மிகப்பெரிய காந்தம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். காந்தத்தின் குணாம்சமே ஒத்த துருவங்கள் விலகிச்செல்லும். எதிரெதிர் துருவங்கள் ஈர்த்துக்கொள்ளும் என்பார்கள். மனித உடலில் மூளையை வடக்கு என்றும் பாதத்தை தெற்கு என்றும் சொல்வார்கள். இதனால்தான் வடக்கே தலை வைத்துப் படுக்கும்போது, வடக்கில் காந்தமண்டலம் இருப்பதால், அது நம்முடைய மூளையில் உள்ள நரம்பு மண்டலத்தை பாதிக்கிறது. எனவேதான் வடக்கில் தலை வைத்து படுக்கக்கூடாது என்றனர்.
வடக்கே தலை வைத்து படுப்பவர்களை, பெரியவர்கள் கண்டிப்பதை நாம் பார்த்திருப்போம். ஆனால் அது ஏன் என்று தெரியுமா?. இதற்கான புரான கதை உண்டு. முன்பு ஒரு முறை பிள்ளையார் மனித முகத்துடன் இருந்த காலத்தில், சிவனுடன் போர் புரிந்த போது, போரில் அவரது தலை துண்டிக்கப்பட்டதாம். தனது செல்லப் பிள்ளைக்கு நேர்ந்த கதியைப் பார்த்த பார்வதி அழுதாளாம். மனைவியை சமாதானப்படுத்த சிவன், வடக்கே யார் தலை வைத்து படுத்திருக்கிறார்களோ, அவரது தலையை வெட்டி வரும்படி தனது பூத கணங்களுக்கு கட்டளையிட்டாராம். அவர்களும் வடக்கே தலை வைத்து படுத்திருந்த யானையின் தலையைக் கொண்டு வந்து பிள்ளையாருக்கு பொருத்தினார்களாம்.