வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

ஸ்ரீராமரிடம் அனுமன் கொண்ட பக்தி; புராணக் கதை

வனவாசம் முடிந்து அயோத்தியின் அரசனாக ஸ்ரீராமர் பொறுப்பேற்று ஆட்சி புரிந்து கொண்டிருந்த சமயம், ஒரு நாள் இரவு அரண்மனையில் சீதாப் பிராட்டியார் தனது கணவரான ஸ்ரீராமர் இருக்கும் அறைக்குள் நுழைந்தார். அவருடனேயே ஸ்ரீராமரின் தொண்டருமான அனுமனும் நுழைய முற்பட்டார். அவரை ராமர்  தடுத்தார்.
சீதா தேவியை போலவே தங்களின் மீது அன்பு வைத்திருக்கும் தன்னை மட்டும் ஏன் தடுக்கிறீகள்? என அனுமன் கேட்டார். அனுமனுக்கு தம்பதிகளின் இல்வாழ்க்கை முறைகளை விளக்க முடியாமல் தவித்தார் ராமர், சீதா தன் நெற்றியில் செந்தூரத்தை இட்டுக்கொண்டிருப்பதால் உள்ளே அனுமதியில்லை என  விளையாட்டாக கூறினார்.
 
இதைக் கேட்ட அனுமன் இதற்கான காரணத்தை கூறுமாறு சீதையிடம் கேட்டார். அதற்கு சீதை தன் நெற்றியில் செந்தூரம் இட்டுக் கொள்வதால் தன் கணவர்  ஸ்ரீராமரின் ஆயுள் நீளும் எனக் கூறினார். இதை கேட்ட அனுமனும் உடனே அயோத்தியின் கடை வீதிக்கு சென்று செந்தூரம் வாங்கி, தன் முகம் மற்றும் இதரப்  பகுதிகளில் பூசிக்கொண்டார். மேலும் அச்செந்தூர மூட்டையைத் தரையில் கொட்டி, அதில் புரண்டு தன் உடல் முழுவதும் செந்தூரத்தைப் பூசிக்கொண்டார். அக்கோலத்துடனேயே அனுமன் அயோத்தியின் அரண்மனைக்குச் சென்றார்.
ஸ்ரீராமர் சிரித்து கொண்டே அதற்கான காரணத்தை கேட்டார் அனுமனிடம். நெற்றியில் செந்தூரத்தை இட்டுக் கொள்வதால் தங்களின் ஆயுள் நீடிக்கும் என்று சீதா தேவிக் கூறியதாகவும், சிறிய அளவில் இடும் செந்தூரத்திற்கே தங்கள் ஆயுள் நீண்டால், உங்கள் மீது அளவற்ற பக்தி கொண்டிருந்த நான் என் உடல் முழுவதும் செந்தூரத்தை பூசிக் கொள்வதால், மேலும் உங்களுக்கு பலகாலம் ஆயுள் நீடிக்கும் அல்லவா என்றார் அனுமன். இதுவே அனுமனின் பயன் கருதா பக்தியாகும்.