திங்கள், 24 பிப்ரவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 24 பிப்ரவரி 2025 (08:32 IST)

ஈஷாவில் ‘யக்‌ஷா’ கலைத் திருவிழா கோலாகல துவக்கம்! முதல் நாளில் களைக்கட்டிய சிக்கில் குருசரண் கச்சேரி

Yaksha Festival

ஈஷா யோக மையத்தில் மஹாசிவராத்திரியை முன்னிட்டு ‘யக்‌ஷா’ எனும் பாரம்பரிய கலைத் திருவிழா நேற்று (23/02/2025) கோலாகலமாக துவங்கியது. இத்திருவிழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட சிரவை ஆதீனம் குமரகுரு அடிகளார் மற்றும் பிரபல பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் ஆகியோர் குத்துவிளக்கேற்றி விழா நிகழ்வுகளை துவங்கி வைத்தனர். 

 

ஈஷாவில் ‘யக்‌ஷா’ திருவிழா, பிப்ரவரி 23 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறுகிறது. ஈஷா மைய வளாகத்தின் சூர்ய குண்ட மண்டபம் முன் நடைபெற்ற முதல் நாள் நிகழ்ச்சியில் பிரபல கர்நாடக இசைக் கலைஞர் சிக்கில் குருசரண் அவர்களின் இசைக் கச்சேரி நடைபெற்றது. இதில் அவருடன் வயலின் கலைஞர் சஞ்சீவ், மிருந்தக இசைக் கலைஞர் பரத்வாஜ் ஆகியோர் பங்கேற்றனர். 

 

இந்த இசை நிகழ்ச்சியை நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மற்றும் ஈஷா தன்னார்வலர்கள் கண்டு ரசித்தனர். மூன்று நாட்கள் நடைபெறும் யக்‌ஷா திருவிழாவில் நாளை (பிப் 24) தேசிய விருது வென்ற ஹிந்துஸ்தானி இசைக் கலைஞர் ராகுல் தேஷ்பாண்டே அவர்களின் இசை நிகழ்ச்சியும்,  செவ்வாய்க்கிழமை (பிப் 25) மீனாட்சி ஸ்ரீனிவாசன் அவர்களின் பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. 

 

நம் தேசத்தின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் வகையில் பாரத கலாச்சாரத்தில் தோன்றிய பல விதமான கலைவடிவங்கள் இன்று நம்முடைய அன்றாட வாழ்க்கையில் இருந்து மறைந்து போய் வருகின்றன. இந்த கலை வடிவங்களின் தனித்தன்மை, புனிதம் மற்றும் பன்முகத்தன்மையை பாதுகாத்து வளர்ப்பதற்கான ஒரு முயற்சியாக ஈஷா ஒவ்வொரு வருடமும் யக்க்ஷா கலைத் திருவிழாவை நடத்துகிறது. கலை, இசை மற்றும் நடனத்திற்கான மூன்று நாள் திருவிழாவாக யக்‌ஷா நடைபெறுகிறது. இதில் தேசத்தின் தலைசிறந்த கலைஞர்கள் கலந்துக்கொண்டு கலை நிகழ்ச்சிகளை வழங்கி வருகின்றனர்.