1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

ஆடி மாத ஏகாதசியில் மகாவிஷ்ணுவை நினைத்து விரதம் இருப்பதால் உண்டாகும் பலன்கள்...!!

அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில், மகாவிஷ்ணுவுக்கு உகந்த நாளாக சுக்ல பட்ச துவாதசி முக்கியத்துவம் வாய்ந்ததாகச் சொல்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

ஆடி மாத சுக்ல பட்ச துவாதசியில், மகாவிஷ்ணுவை நினைத்து விரதம் மேற்கொண்டால், நினைத்ததெல்லாம் நடக்கும், கேட்டதெல்லாம் கிடைக்கும் என்பது  ஐதீகம்.
 
தட்சிணாயினத்தின் முதல் ஏகாதசியாக வருவது 'தேவசயனி ஏகாதசி'. இந்த நாளில் மகாவிஷ்ணு அரிதுயில் பயிலத் தொடங்குவார் என்றும் நான்கு மாதங்களுக்குப்  பின்வரும் பிரபோதினி ஏகாதசி அன்றுதான் கண்விழிப்பார் என்பது ஐதிகம். அப்படிப்பட்ட தேவசயனி ஏகாதசி தினத்தன்று விரதம் இருந்தால் வாழ்வில் இக்கட்டான தருணங்களிலிருந்து தப்பிக்க உதவும் வலிமை உண்டாகும் என்கின்றன ஞான நூல்கள்.
 
சுக்ல பட்ச துவாதசி திதியில், காலையில் வீட்டில் விளக்கேற்றி. வீட்டில் உள்ள பெருமாள் படத்துக்கு சந்தனம் குங்குமமிட்டு, துளசி மாலை சாற்றிவிஷ்ணு  சகஸ்ரநாமம் பாராயணம் செய்யலாம். இயலாதவர்கள், விஷ்ணு சகஸ்ர நாமத்தை ஒலிக்க வைத்து கேட்டு பெருமாளை வழிபடலாம்.
 
துளசியால் அர்ச்சனை செய்யுங்கள். புளியோதரை அல்லது தயிர்சாதம் நைவேத்தியம் செய்யுங்கள். முடியுமெனில், சுக்ல பட்ச ஏகாதசியிலும் மறுநாள்  துவாதசியிலும் என இரண்டு நாட்களும் பெருமாளை வழிபடலாம். காலையிலேயே நீராடி, பெருமாளின் திவ்விய நாமங்களைச் சொல்லி துளசியால் அர்ச்சித்து  வழிபடுங்கள்.
 
ஏகாதசி அன்று புளியோதரையும் துவாதசி அன்று தயிர்சாதமும் என பிரித்துக் கொண்டு நைவேத்தியம் செய்து மகாவிஷ்ணுவை வழிபாடு செய்யலாம். ஏகாதசி நாளில், அன்னதானம் செய்வது மகத்தான பலன்களை வழங்கும்.