திங்கள், 22 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

பஞ்சாசர மந்திரத்தினை உச்சரிப்பதால் உண்டாகும் பலன்கள் !!

இறைவனின் திருவருளைப் பெறுவதற்கு உறுதுணையாக இருப்பவை திருநீறு, ருத்திராட்சம், திருவைந்தெழுத்து ஆகிய சாதனங்கள். 

திருநீறும், ருத்திராட்சமும் புறச்சாதனங்கள். திருவைந்தெழுத்து எனப்படும் பஞ்சாக்கரம் அகச்சாதனம் இம்மந்திரமானது உயிரில் பதிந்து மூச்சுக் காற்றில் கலந்து வருவதால் நம்முள் இருந்தே நமக்குப் பயன்தருவதாக இருக்கும். 
 
மந்திரங்கள் பல இருந்தாலும் அவற்றில் தலையாயது பஞ்சாசர மந்திரம் என்பர். வேத ஆகமங்களில் நடுநாயகமாக நிலைபெற்றிருப்பது பஞ்சாசர மந்திரமே.
 
ரிக், யஜுர், சாம என்ற மூன்றில் நடுவாகிய யஜுர் வேதத்திலுள்ள ஏழு காண்டங்களில், நடுக்காண்டத்தின் மையமாகிய நான்காவது சம்ஹிதையில் நடுநாயகமாக  இருப்பது ருத்ராத்யாயம். அதன் நடுநாயகமாக இருப்பது ருத்திர ஜெபம். 
 
ருத்திரத்தின் நடுவில் வரும் மந்திரம் நம சோமாயச நமசிவாய என்பது இம்மந்திரத்தை தனி வாக்கியமாக ஒருமுறை ஓதும்போது நமசிவாய என்றும், பலமுறை உச்சரிக்கும்போது சிவாய நம என்றும் ஒலிக்கும்.
 
மூவர் அருளிய திருமுறைகளுள் 4, 5, 6-ஆவது திருமுறைகள் அப்பர் அருளியவை அவற்றில் நடுவில் அமைந்துள்ளது. ஐந்தாவது திருமுறை, அதன் நடுவில்  இடம்பெற்றிருக்கும் திருப்பாலைத்துறைத் திருப்பதிகத்தில் 11 பாடல்கள் உள்ளன. அவற்றுள் நடுவான ஆறாவது பாடலில் சிவாய நம என்ற பஞ்சாசர மந்திரம்  நடுநாயகமாக வைத்துப் போற்றப்படுகிறது.
 
ஓம் எனும் பிரணவத்தின் விரிவே சிவாய நம ஓம் என்ற பிரணவம் மூல மந்திரம் ஆகும். அவ்வொலியிலிருந்தே அண்ட சராசரங்கள் தோன்றின. அனைத்திற்கும் ஆதாரமாகத் திகழ்வது பஞ்சாசர மந்திரமே. உயிர்கள் என்று துன்புற்றனவோ, அன்றே இறைவன் உயிர்கள் துன்பத்திலிருந்து விடுபடும் சாதனமாக  திருவைந்தெழுத்தை அருளினார்.
 
இம்மந்திரத்தின் வகைகளை ஐந்தாகக் கூறுவர். தூல பஞ்சாசரம் - நமசிவாய, சூக்கும பஞ்சாசரம் - சிவாயநம, காரண பஞ்சாசரம் - சிவய சிவ, மகாகாரண பஞ்சாசரம்  - சிவ, மகாமனு பஞ்சாசரம் - சி.