பைரவரை தேய்பிறை அஷ்டமி வழிபாட்டு பலன்கள் !!
பைரவரை தேய்பிறை அஷ்டமி தினத்தில் விரதம் இருந்து பஞ்ச தீபம் ஏற்றிவைத்து வழிபாடு செய்தால், காலத்தால் தீர்க்க முடியாத தொல்லைகள் கூட நீங்கும் என்பது ஐதீகம்.
சிவபெருமானின் ஐந்து முகங்களில் ஒன்றான தத்புருஷ முகத்தில் இருந்து தோன்றியவர் பைரவர். மன்மதனின் கர்வம் அடங்கச் செய்தவர். எல்லாவற்றுக்கும் மேலாக சூரியனின் மகனான சனியை, சனீஸ்வரனாக்கி நவக்கோள்களில் வலிமை வாய்ந்த கோளாக உயர்த்தி பெருமை சேர்த்தவர்.
பைரவ மூர்த்தியை கால பைரவர், மார்த்தாண்ட பைரவர், சேத்திர பாலகர், சத்ரு சம்கார பைரவர், வடுக பைரவர், சொர்ணாகாசன பைரவர் உள்ளிட்ட பல பெயர்களில் அழைத்து வழிபடுகிறார்கள்.
பைரவ மூர்த்தியை பவுர்ணமிக்கு பின் வரும் அஷ்டமியில், அதாவது தேய்பிறை அஷ்டமி தினத்தில் விரதம் இருந்து பஞ்ச தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்தால், காலத்தால் தீர்க்க முடியாத தொல்லைகள் கூட நீங்கும் என்பது ஐதீகம்.
காலத்தை வென்றவர், கால சக்கரத்தை இயக்குபவர் இந்த கால பைரவர். இவரது உடலில் 27 நட்சத்திரங்களும், 12 ராசிகளும், 9 கோள்களும் அமைந்திருப்பதாக புராணங்கள் சொல்கின்றன.
இவரது மூச்சுக் காற்றில் இருந்து தான் திருவாக்கியம் மற்றும் திருக்கணிதம் ஆகிய பஞ்சாங்கங்கள் உண்டானதாக கூறப்படுகிறது. இவற்றில் இருந்து மற்ற காலக் கணித முறைகள் தோன்றியதாம்.
கால பைரவர் மற்ற பைரவர்களைக் காட்டிலும் உக்கிரமானவர். ஆனால் தன்னை நம்பியவர்களை கண்ணின் இமைபோல் காப்பவர். இவரே சிவ ஆலயங்களின் காவல் தெய்வம். இவரின் அருள் இன்றி சிவ வழிபாடு முழுமை பெறாது. சிவவழிபாட்டில் முன்னேற்றம் காண கால பைரவரின் அருள் மிகவும் அவசியம் ஆகும்.