திருநீறு அணிவதன் தத்துவம் பற்றி....!
நம் முன்னோர்கள் செய்த ஒவ்வொரு செயலுக்கும் பின்னால் ஒரு அறிவியல் ரகசியம் ஒளிந்துள்ளது. ஆன்மிகத்தில் அறிவியலை புகுத்துவதில் நம் முன்னோர்களுக்கு இணை இந்த உலகில் யாரும் இல்லை என்றே கூறலாம்.
நாம் தினமும் விபூதி வைத்துக்கொள்வதற்கு பின் அறிவியல் உண்மை ஒளிந்துள்ளது. மனித உடலில் நெற்றி என்பது மிகவும் முக்கியமான பாகமாகும். நெற்றியின் வழியாகவே மனித உடலானது அதிக அளவிலான சக்தியை வெளியிடவும் உள்ளிழுக்கவும் செய்யும்.
திருநீறை மூன்று கோடுகளாக போடுவதன் தத்துவம் என்ன என்பதை பார்த்தால், மும்மலங்கலான ஆணவம், கன்மம், மாயை மூன்றையும் ஞானத்தினால் சுட்டெரித்து நிர்மூல நிலையினை அடந்தவர் என்பதன் வெளிப்பாடாக மூன்று கோடுகள் போடப்படுகின்றன மேலும் சூரிய கலை, சந்திர கலை, அக்னி கலை மூன்றையும் கடந்து மூச்சற்ற சுத்த நிலையினில் அருள் அனுபவம் பெற்றவர் என்பதையும் உணர்த்துகின்றது.
“மந்திரமாவது நீறு” – திருஞானசம்பந்தர், திருநீற்றுப் பதிகம். மன் + திறம் = மந்திரம். மும்மலங்களையும் சாம்பலாக்கி அழித்தபின் எஞ்சியது நீறு. நீறிடுதல் என்பது மாசற்ற சுத்த சாந்த நிலைக்கு அடையாளமும் ஆகும்.
புருவ நடுவே தியான நிலை; ஆத்ம பிரகாசம் உள்ளது. அப்பகுதியில் முக்கோண வடிவாக எரிவதை யோகியர் என்பர். அவ்விடத்தில் தியானம் ஊன்ற வேண்டுமென்பதற்காகவே சந்தனம், குங்குமம், திருநீறு, திருமண் முதலியவற்றினை இடுவர். புருவ நடுவின் மேல் நெற்றியின் சஹஸ்ராரத்தில் துரியவெளியுள்ளது. அவ்விடத்தில் அருட்சோதி தோன்றுவதனைக் குறிக்கவே திருநீறு இடுகின்றனர்.