திங்கள், 15 டிசம்பர் 2025
  1. ஆன்மிகம்
  2. »
  3. ஜோ‌திட‌ம்
  4. »
  5. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Webdunia

த‌மி‌ழ் பு‌த்தா‌ண்டு ரா‌சி பல‌ன்: துலாம்!

த‌மி‌ழ் பு‌த்தா‌ண்டு ரா‌சி பல‌ன்: துலாம்!
FILE
பிறர் தன்னை குற்றம் குறை கூறிக் குதர்க்கமாகப் பேசினாலும் மனம் தளராத நீங்கள், ஒற்றுமை உணர்வு அதிகமுள்ளவர்கள். உங்களின் ராசிநாதனான சுக்ரன் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் எதிர்பார்ப்புகள் யாவும் தடையின்றி முடியும். தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்குவீர்கள். உங்களிடம் மறைந்துக் கிடந்த திறமைகள் வெளிப்படும். பிரபலங்களின் உதவியுடன் சில காரியங்களை சாதித்துக் காட்டுவீர்கள்.

திருமணப் பேச்சு வார்த்தை கூடி வரும். அழகு, இளமைக் கூடும். புது தெம்பு பிறக்கும். சோர்ந்திருந்த நீங்கள் சுறுசுறுப்பாவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். உங்கள் ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். வீடு கட்டுவது, வாங்குவது போன்ற முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். பூர்வீக சொத்துப் பங்கை கேட்டு வாங்குவீர்கள். மனைவி நீண்ட நாளாக கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். மனைவிவழி உறவினர்களின் ஆதரவுப் பெருகும்.

இந்த விஜய வருடம் உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டில் பிறப்பதால் எளிதாக முடிய வேண்டிய விஷயங்கள் கூட போராட்டத்திற்கு பின்பு முடியும். ஒரு பக்கம் பணம் வரும் என்றாலும் செலவுகள் இருமடங்காக இருந்துக் கொண்டேயிருக்கும். வேலைச்சுமை அதிகரிக்கும். இரண்டாம் முயற்சியில் சில வேலைகள் முடியும். வீட்டில் குடி நீர் குழாய், கழிவு நீர் குழாய் அடைப்பு, மின்னணு, மின்சார சாதனப் பழுது வந்துச் செல்லும். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். அவ்வப்போது கழுத்து வலி, தொண்டை புகைச்சல், சளித் தொந்தரவு, காய்ச்சல் வந்துப் போகும். நண்பர்கள், நெருங்கிய உறவுக்காரர்களுடைய திருமணத்திற்கு சீர், சனத்தி செய்ய கொஞ்சம் கடனும் வாங்க வேண்டி வரும்.

உங்கள் ராசிக்கு சப்தமஸ்தானமான 7-ம் வீட்டில் முக்கிய கிரகங்கள் அமர்ந்திருக்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் உங்கள் பலம், பலவீனமறிந்து செயல்படப்பாருங்கள். உடல் உஷ்ணம் அதிகரிக்கும். மனைவியுடன் பனிப்போர் வந்துச் செல்லும். அரசு காரியங்கள் தாமதமாக முடியும். வீடு, மனை வாங்குவது, விற்பதில் சிக்கல்கள் வந்துப் போகும். அநாவசியச் செலவுகளை கட்டுப்படுத்தப்பாருங்கள். உடன்பிறந்தவர்களை அனுசரித்துப் போங்கள். அவர்களால் பிரச்னைகளும் வந்துப் போகும். வழக்கில் அலட்சியம் வேண்டாம். சொத்து வாங்கும் போது பட்டா, சிட்டா, வில்லங்க சான்றிதழ்கள் எல்லாம் சரியாக இருக்கிறதான என பார்த்து வழக்கறிஞரை கலந்தாலோசித்து வாங்குவது நல்லது.

27.5.2013 வரை உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டில் குரு இருப்பதால் எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலைகள், சிலர் மீது நம்பிக்கையின்மை, வீண் அலைச்சல் வந்துச் செல்லும். மறைமுக எதிரிகள் முளைப்பார்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். அனாவசியமாக யாரையும் வீட்டிற்குள் அழைத்து வர வேண்டாம். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை, மனைவி, பிள்ளைகளுடன் மனம் விட்டு பேச முடியாத நிலை வந்துப் போகும்.

28.5.2013 முதல் உங்களின் பாக்யஸ்தானமான 9-ம் வீட்டில் குரு நுழைவதால் இடையூறுகளைக் கடந்து வெற்றி பெறுவீர்கள். சில இடங்களில், சில நேரங்களில் அமைதியாக இருந்து காரியம் சாதிப்பீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. குடும்பத்தில் தள்ளிப் போன சுப நிகழ்ச்சிகளெல்லாம் ஏற்பாடாகும். மகளுக்கு நல்ல வரன் அமையும்.

மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் அடங்கும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். 21.5.2013 முதல் 6.7.2013 வரை செவ்வாய் உங்கள் ராசிக்கு 8-ம் இடத்திலும் மற்றும் 30.11.2013 முதல் வருடம் முடியும் வரை 12--ம் வீட்டில் மறைவதாலும் இக்காலக்கட்டத்தில் சிறுசிறு விபத்துகள், பொருள் இழப்பு, ஏமாற்றங்கள் வந்து நீங்கும். சகோதர-சகோதரிகளுடன் மனவருத்தம் ஏற்படும். முன்கோபத்தால் இரத்த அழுத்தம் அதிகரிக்கும்.

இந்தாண்டு முழுக்க உங்களின் பிரபல யோகாதிபதியான சனிபகவான் ராசியிலேயே உச்சம் பெற்று அமர்ந்திருப்பதால் எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். வீடு வாங்குவீர்கள். சிலர் புது மனை புகுவீர்கள். என்றாலும் ஜென்மச் சனியாக தொடர்வதால் உடல் நலம் பாதிக்கும். வாயு பதார்த்தங்கள், அசைவ, கார உணவுகளை தவிர்ப்பது நல்லது. செரிமானக் கோளாறு, வயிறு உப்புசம், அசதி, சோர்வு வந்துச் செல்லும். வழக்கை நினைத்து கவலையடைவீர்கள். தாழ்வுமனப்பான்மை உள்ளவர்களுடன் பழகிக் கொண்டிருக்காதீர்கள். உறவினர்களில் சிலர் உங்களைப் பார்த்தால் ஒரு பேச்சு, பார்க்காவிட்டால் ஒரு பேச்சு என்று நடந்துக் கொள்வார்கள்.

இந்த வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்குள்ளேயே ராகுவும், 7-ம் வீட்டிலேயே கேதுவும் இருப்பதால் முன்கோபம், மனதில் ஒருவித சஞ்சலம், எதிலும் ஆர்வமில்லாத நிலை, ஹார்மோன் பிரச்னை, தலைச்சுற்றல் வந்துச் செல்லும். இரும்பு, நார், சுண்ணாம்பு சத்து அதிகமுள்ள காய், கனிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம், ஈகோ பிரச்னைகள் வரக்கூடும். மனைவிக்கு மருத்துவச் செலவுகள், அவருடன் மோதல்கள் வந்துப் போகும். மனைவிவழி உறவினர்களுடன் உரிமையாகப் பேசி பெயரைக் கெடுத்துக் கொள்ளாதீகள்.

நீங்கள் யாரையும் மதிக்கவில்லை என்றெல்லாம் சிலர் குறை கூறுவார்கள். ஏமாற்றப்படபடுவோமோ என்று கலங்குவீர்கள். காலத்தை வீணடித்துவிட்டதாகவும் நினைப்பீர்கள். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிட்டுக் கொள்ளாதீர்கள். மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டாம். முக்கிய விஷயங்களை நீங்களே நேரடியாக சென்று செய்வது நல்லது.
கன்னிப் பெண்களே! தடைபட்ட கல்யாணம் இனி கூடி வரும். காதல் கனியும். பெற்றோருக்கு சில ஆலோசனைகள் வழங்குவீர்கள். புதிதாக அறிமுகமாகுபவரிடம் கொஞ்சம் தள்ளியே இருப்பது நல்லது.

மாணவ-மாணவியர்களே! மதிப்பெண் உயரும். வகுப்பாசிரியர் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். பெற்றோர் உங்களின் தேவைகளை நிறைவேற்றுவார்கள். கவிதை, கட்டுரை போட்டிகளில் முதலிடம் பிடிப்பீர்கள்.

வியாபாரிகளே! குறைந்த லாபம் வைத்து விற்பதன் மூலம் வாடிக்கையாளர்கள் அதிகமாவார்கள். ஆடி, ஆவணி மாதங்களில் வியாபாரம் சூடுபிடிக்கும். புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். ஏழரைச் சனி தொடர்வதால் அனுபவமிக்க வேலையாட்கள் திடீரென்று பணியை விட்டு விலகுவார்கள். பங்குதாரர்களிடம் வளைந்துக் கொடுத்துப் போங்கள். மார்கழி, தை மாதங்களில் பழைய பாக்கிகள் வசூலாகும். பங்குனி மாதத்தில் அயல்நாட்டு தொடர்புடைய புது பங்குதாரர் வர வாய்ப்பிருக்கிறது. கொடுக்கல்-வாங்கலில் நிம்மதி ஏற்படும். உணவு, ஷேர், ஸ்பெகுலேஷன், கல்வி வகைகளால் ஆதாயம் உண்டு.

உத்‌தியோகஸ்தர்களே! 10.7.2013 முதல் உங்கள் கை ஓங்கும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். ஆடி, ஆவணி மாதங்களில் புது வாய்ப்புகள் வரும். உங்கள் மீது வீண்பழி சுமத்திய உயரதிகாரி மாற்றப்படுவார். மூத்த அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். சில கூடுதல் சிறப்பு பொறுப்புகளை உங்களிடம் ஒப்படைப்பார்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்புடன் தேங்கிக் கிடந்த வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். பங்குனி மாதத்தில் பதவி உயர்வு உண்டு. எதிர்பார்த்த சம்பள பாக்கியும் கைக்கு வரும்.

கலைத்துறையினரே! பெரிய நிறுவனங்களின் அழைப்பு உங்களை தேடி வரும். வீண் வதந்திகளிலிருந்து விடுபடுவீர்கள்.

இந்த விஜய வருடத்தின் முற்பகுதி கொஞ்சம் முணுமுணுக்க வைத்தாலும் மையப்பகுதி முதல் மகிழ்ச்சியையும், மனநிறைவையும் தருவதாக அமையும்.

பரிகாரம்:
காரைக்கால் அருகிலுள்ள அம்பகரத்தூரில் அருள்பாலிக்கும் அருள்மிகு அஷ்டபுஜக் காளியை பஞ்சமி திதி நாளில் சென்று வணங்குங்கள். விபத்தில் சிக்கியவருக்கு உதவுங்கள்.