பவாகாத் சக்தி பீடம்!
|
குஜராத் மாநிலத்தில் உள்ள சக்தி பீடங்கள் மூன்று. அரசூர் அருகிலுள்ள அம்பாஜி, சுன்வாலில் உள்ள பாலா, சம்பானீர் அருகிலுள்ள பவாகாத் மகா காளி ஆகியன அம்மூன்று சக்தி பீடங்கள் ஆகும். இவைகள் தவிர, கட்ச்சிலுள்ள அசாபுரா, அபு மலையிலுள்ள அற்புத தேவி, ஹல்வாத்திலுள்ள சுந்தரி, கொய்லா அல்லது கோல்கிரியிலுள்ள ஹர்சித்தி, நர்மதை நதிக் கரையிலுள்ள அனுசூயா ஆகியன இம்மாநிலத்திலுள்ள மற்ற சக்தித் தலங்களாகும்.
பவாகாத் சக்தி பீடம் வதோத்ராவில் இருந்து 50 கி.மீ. தூரத்தில் உள்ளது. தக்க்ஷணின் யாகத்தை சிதைத்த சிவபெருமான் கோபம் கொண்டு ருத்ர தாண்டவம் ஆடியபோது, அவரின் சரிபாதி அங்கமாயிருந்த சக்தியின் உடல் பிரிந்து சிதறி பாரத நாட்டின் பல இடங்களில் விழுந்தது. அப்படி சக்தியின் உடல் பாகங்கள் விழுந்த இடமெல்லாம் சக்தி பீடங்களாக வழிபடப்படுகிறது. சக்தியின் இடது மார்பகம் பவாகாத்தில் விழுந்ததெனவும், அதுவே இன்றளவும் குறிப்பிடத்தக்க சக்தி பீடங்களில் ஒன்றாக வழிபடப்படுவதாகவும் கூறப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி பண்டிகையின்போது இத்திருத்தலத்திற்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இத்திருத்தலத்திற்கு அருகிலுள்ள ஒரு மலையின் பெயரை இங்கு குடிகொண்டுள்ள சக்தியின் தலப்பெயராக உள்ளது.
சம்பானீரிலிருந்து மலைப்பகுதிகளின் இடையே செல்லும் பாதையில் சென்று பவாகாத்தை அடையவேண்டும். இங்குள்ள மகா காளியின் கோயிலில் காளிகா மாதாவின் சன்னதியும் உள்ளது. மகா காளியின் உருவமும், பஹூசரா சக்தியின் யந்திரமும் இங்குள்ளது.
|
இத்திருத்தலத்திலுள்ள காளியை தக்ஷிண காளி என்றே அழைக்கின்றனர். தக்ஷிண மார்கமெனும் வேத, தாந்திரிக முறையிலேயே வழிபாடுகள் செய்யப்படுகின்றன.நவராத்திரி பண்டிகைகளின்போது பற்பல பூஜைகள் செய்யப்படுகின்றன.
|
சம்பானீரிலிருந்து பவாகாத் செல்ல மூன்று கட்டமாக பயணம் செல்ல வேண்டும். பவாகாத் பீடபூமி 1,471 அடி உயரத்திலுள்ளது. இதன் பெயர் மாச்சி ஹவேலி. இவ்விடம் வரை மாநில அரசின் பேருந்து சேவை உள்ளது. இங்கு தங்கும் விடுதிகளும் உள்ளன. மாச்சி ஹவேலி பீடபூமி மீது டேலியா டலாவ், துதியா டலாவ் எனும் இரண்டு ஏரிகள் உள்ளன.
|
எப்படிச் செல்வது :
வான் வழி : அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து பவாகாத் 190 கி.மீ. தூரத்திலுள்ளது.
இரயில் வழி : வதோத்ரா இரயில் நிலையத்திலிருந்து 50 கி.மீ. தூரத்திலுள்ளது.
சாலை வழி : வதோத்ராவிலிருந்து மாநில அரசு பேருந்துகளும், தனியார் சொகுசு பேருந்துகளும் பவாகாத் வரை செல்கின்றன.
