வியாழன், 9 ஜனவரி 2025
  1. கரு‌த்து‌க் கள‌ம்
  2. எழுத்தாளர்கள்
  3. செல்வன்
Last Updated : செவ்வாய், 7 அக்டோபர் 2014 (13:17 IST)

ஒரு துப்பாக்கி, ஒரு போர், ஒரு சாகசம்

உலகின் புகழ் பெற்ற கைத்துப்பாக்கிகளில் ஒன்று கோல்ட் 45 (Colt 45). இயந்திரத் துப்பாக்கிகளில் எப்படி ஏகே 47 பிரபலமோ, அப்படி கைதுப்பாக்கிகளில் கோல்ட் 45 பிரபலம். இந்தத் துப்பாக்கி பிறந்த கதை சுவாரசியமானது
 
19ஆம் நூற்றாண்டில் கட்டை துப்பாக்கிகளையும், பயோனட்டுகளையும் ரிவால்வர்களையும் போருக்குப் பயன்படுத்தி வந்தார்கள். ரிவால்வர் என்பது தமிழ் சினிமாவில் வில்லன்கள் வைத்திருக்கும் ஆறு குண்டு அடங்கிய துப்பாக்கி. இதை வைத்துப் போரைச் சமாளிக்க முடியாது என்பது 1899இல் தொடங்கிய பிலிப்பைன்ஸ் - அமெரிக்கப் போரில் தெரிய வந்தது. மேலை நாடுகளில் போரில் சாவகாசமாகத் துப்பாக்கிகளில் குண்டுகளை லோட் செய்து சுடலாம். காரணம், அப்போதைய மேலைநாட்டுப் போர்களில் இரு தரப்பு வீரர்களும் தொலைதூரத்தில் இருந்து பீரங்கி குண்டுகளையும், துப்பாக்கி குண்டுகளையும் சுட்டுக்கொள்வார்கள். ஆனால் பிலிப்பைன்ஸில் நிகழ்ந்த போரில் முதல் முதலாக காடுகளில் மறைந்திருந்து தாக்கும் கொரில்லா போர்வீரர்களை அமெரிக்கப் படைகள் எதிர்கொள்ள நேர்ந்தது.
 
காடுகளில் பதுங்கியிருக்கும் பிலிப்பைன் கொரில்லா வீரர்களான மோரோக்கள் (Moro), திடீர் என அமெரிக்க வீரர்கள் மேல் பாய்ந்து தாக்குதல் நடத்துவார்கள். மோரோக்கள் வலியை மறக்கடிக்கும் போதை மருந்தையும் பயன்படுத்தியதால் அமெரிக்க வீரர்களின் ரிவால்வர் துப்பாக்கி குண்டுகள் அவர்களைச் சாய்க்க முடியவில்லை. ஒரு மோரோவைக் கொல்ல ஒரு குண்டுக்கும் மேல் தேவைப்பட்டது. ஆறு குண்டுகளை மட்டுமே தாங்கும் ரிவால்வர்களை லோடு செய்கையில் அமெரிக்கப் படைவீரனை மோரோக்கள் கொல்லும் வாய்ப்பும் அதிகம். இப்படி நடந்த போரில் வெறும் கத்தி, வில் அம்பை மட்டும் வைத்திருந்த மோரோக்கள், அன்றைய உலகின் வல்லரசான அமெரிக்காவை பிலிப்பைன் காட்டுப் பகுதிகளில் எளிதில் தோற்கடித்தார்கள். கற்கால ஆயுதம் ஏந்திய காட்டுமிராண்டிகளிடம் இப்படி படுதோல்வி அடைந்த அமெரிக்க ராணுவம் பழியை ரிவால்வர்கள் மேல் சுமத்தி, புதிய வகை கைதுப்பாக்கிகள் வேண்டும் என முடிவெடுத்தது.

 
புதிய வகை கைதுப்பாக்கிகளுக்கு வைக்கப்பட்ட பரிசோதனையில் கோல்ட் 45 மற்றும் சாவேஜ் (savage) எனும் இரு கம்பனிகளின் துப்பாக்கிகள் மட்டுமே இறுதிக் கட்ட சோதனைக்கு எஞ்சி இருந்தன. கடைசி கட்ட பரிசோதனையில் இரு துப்பாக்கிகளையும் இடைவிடாமல் தொடர்ந்து சுட்டுக்கொண்டே இருந்தார்கள். 
 
2 நாட்களில் கோல்ட் துப்பாக்கி 6000 குண்டுகளைத் தொடர்ந்து ஓய்வின்றி சுட்டுத் தள்ளியது. அதன்பின் துப்பாக்கியைக் கையில் பிடிக்க முடியாமல், சூடானதும் அதை நீரில் போட்டு எடுத்து, மீண்டும் சுட ஆரம்பிக்கையில் அது தொடர்ந்து சுட்டது. அருகே பரிசோதிக்கப்பட்ட சாவேஜ் துப்பாக்கி 2 நாட்களில் 37 தடவை சுடுவதை நிறுத்தி இருந்தது. ஆக இப்படிப்பட்ட அக்கினி பரிட்சையில் தேறிய செமி ஆட்டொமாடிக் துப்பாக்கி கோல்ட், அமெரிக்க ராணுவத்தின் ஆதர்ச துப்பாக்கி ஆக மாறியது. அதன் களப்பயனைச் சோதிக்கும் வாய்ப்பை முதல் உலக யுத்தம் கொடுத்தது.
மேலும்

முதல் உலக யுத்தத்தில் 13 பேர் அடங்கிய அமெரிக்கப் படையணி ஒன்றுக்கு ஜெர்மன் படையணிகளைத் தாக்கி, அவர்களின் பீரங்கிகளைக் கைப்பற்றும் பணி கொடுக்கப்பட்டது. பதுங்கிப் பதுங்கிச் சென்ற அந்த அணியின் மேல் யதேச்சையாக வந்து விழுந்த பீரங்கி குண்டு ஒன்று, அதன் தலைவர் உட்பட ஆறு பேரைக் கொன்றது. தலைவரை இழந்த அணிக்கு தலைமை தாங்கினார், ஆல்வின் யார்க் எனும் இளைஞர்.

 
வெறும் ஏழு பேரை வைத்துக்கொண்டு நூற்றுக்கணக்கான ஜெர்மானியர்கள் மேல் தாக்குதல் தொடுத்தார். யார் எங்கே இருந்து சுடுகிறார்கள் எனத் தெரியாத குழப்பமான சூழல். எத்தனை அமெரிக்கர்கள் தாக்குகிறார்கள் எனப் புரியாமல் ஜெர்மானியர்கள் குழம்பினார்கள். ஜெர்மானிய இயந்திரத் துப்பாக்கிகள் முழங்க, அஞ்சாமல் திருப்பிச் சுட்டார்கள் அமெரிக்கர்கள். ஒரு கட்டத்தில் யார்க்கின் இயந்திரத் துப்பாக்கியில் குண்டுகள் தீர்ந்த நிலையில் யார்க்கை நோக்கி பயோநெட் ஏந்திய ஆறு ஜெர்மானிய வீரர்கள் பாய்ந்தார்கள். சற்றும் தயங்காத ஆல்வின் யார்க், தன் கோல்ட் 45 துப்பாக்கியை உருவி எடுத்தார். ஆறு ஜெர்மானியர்களையும் சுட்டுத் தள்ளினார். அதன்பின் யார்க் தன் கோல்ட் 45ஐ மட்டும் வைத்துக்கொண்டு, ஜெர்மானியர்களைச் சுட்டுத் தள்ளி, முன்னேறி, பீரங்கிகளை அடைந்து, பீரங்கிகளை இயக்கிய ஜெர்மானியர்களைச் சுட்டு கொன்று, பீரங்கிகளைப் பிடித்தார். பீரங்கி பிடிபட்டபோது யார்க்கின் துப்பாக்கியில் மீதம் இருந்தது ஒரே ஒரு குண்டுதான்.
 
பீரங்கிகள் பிடிபட்டவுடன் ஜெர்மானிய தளபதி பால் வால்மர், அரைகுறை ஆங்கிலத்தில் பேசி, சரணடைவதாகக் கூறினார். அதன்பின் ஒற்றை புல்லட்டுடனும், ஏழு வீரர்களுடனும் களத்தில் நின்ற ஆல்வின் யார்க்கிடம் 4 அதிகாரிகள் உள்ளிட்ட 132 ஜெர்மானியர்கள் சரணடைந்தார்கள்.
 
ஆல்வின் யார்க்குக்கு ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருதான மெடல் ஆஃப் ஹானர் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டது. கோல்ட் 45, அதன்பின் உலக ராணுவ வரலாற்றில் உயரிய இடம் பெற்றது.