நிலையற்ற உடலை மறந்து நிலையான ஆன்மாவைச் சிந்தியுங்கள் - ஷீரடி சாய் பாபா

Sasikala|
சாயி பாபாவின் அறிவுரைகள் மிகவும் அற்புதமானவை. இவ்வுலக வாழ்வின் துன்பப் பெருஞ்சுமைகளைச் சுமந்து கொண்டிருப்பவர்கள், கவலையால் பீடிக்கப்பட்டோர்கள் ஆகியவர்களுக்கு மன அமைதியையும், மகிழ்ச்சியையும் அவை அளிக்கின்றன.

 
 
வேத அறிவையொத்த விறுவிறுப்புள்ளதும், அறிவூட்டுவதுமான சாயி பாபாவின் இந்த அறிவுரைகள் எல்லாம் கேட்கப்பட்டு நற்சிந்தனை செய்யப்பட்டால் அடியவர்கள் கோரும் பிரம்மத்துடன் ஐக்கியமாதல் அஷ்டாங்க யோகம், தியானப் பேரின்பம் முதலியவற்றை பெறுவார்.
 
ஒரு நாள் சாய் பாபா குளிர் காய்ந்து கொண்டுருந்த நெருப்பில் தனது கையை விட்டார். கூடியிருந்த பக்தர்கள் இவ்வாறு செய்ய காரணம் என்ன? என வினவினர். அதற்கு பாபா ஒரு பக்தை கண்மூடி என்னையே நினைத்தவாறிருந்தாள், தன் குழந்தை பளபளவெனப் பிராகாசிக்கும் நெருப்பை நோக்கி நகர்வதையோ, அதில் விழுவதையோ அவள் கவனிக்கவே இல்லை. என் மேல் கொண்ட பக்தியால்தானே தன் குழந்தையை அவள் கவனிக்க மறந்தாள்? அப்போது அந்தக் குழந்தையைக் காப்பாற்ற வேண்டியது என் பொறுப்பு ஆகிறதல்லவா? இதனால் குழந்தையின் உயிர் காப்பாற்றப் பட்டுவிட்டது. என் கரம் கொஞ்சம் கடுகிவிட்டது. அதனால் பாதகமில்லை என்றார்.
 
இந்த விஷயத்தைக் கேள்விபட்டார் பாபாவின் அடியவரான நானா சாஹேப் சாந்தோர்கர். கடவுள் மனித உடல் எடுத்தாலும், அந்த உடலின் உபாதைகள் அவருக்கும் இருக்குமே என கருதினார். உடனே பாபாவிற்கு மருத்துவம் பார்ப்பதற்காக மருத்துவர் பரமானந்தை அழைத்து வந்தார். மருத்துவர் பரமானந்த், ஷீர்டி வந்து சேர்ந்தார். 
 
பாபாவின் தீய்ந்த கரத்திற்கு மருந்திட வேண்டி கையைக் காட்டுமாறு பாபாவிடம் பக்தியோடு விண்ணப்பித்தார். ஆனால் பாபாவிடமிருந்து கலகலவென ஒரு சிரிப்புத்தான் எழுந்தது.
 
அதற்கு பாபா இந்தக் சாதாரண உடல் வேதனை பெரிதா என்ன? நிலையற்ற உடலை மறந்து நிலையான ஆன்மாவைச் சிந்தியுங்கள். நம் உடலில் வரும் நோய்கள் ஒன்றுமே இல்லை. உள்ளத்தில் வரும் காமம் கோபம் போன்ற நோய்களை கடவுள் மேல் கொண்ட பக்தியால் குணப்படுத்திக் கொள்ள முயலுங்கள்! பாபாவின் தித்திக்கும் அருள்மொழிகளைக் கேட்டு பக்தர்கள் பரவசம் அடைந்தார்கள்.
 
இதன் மூலம் பாபாவின் பக்தர்கள் சுய நலத்தை துறந்து பிறர் நலனுக்காக வாழவேண்டும் என்ற படிப்பினையைப் பெற்றார்கள்.


இதில் மேலும் படிக்கவும் :