1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்
Written By Veeramani
Last Updated : செவ்வாய், 15 ஏப்ரல் 2014 (19:57 IST)

வாக்கு கேட்க விடாமல் தாக்குவது தவறான போக்கு - வானதி சீனிவாசன்

தமிழக பாரதீய ஜனதா கட்சியின் பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
Vanathi Srinivasan interview
தஞ்சாவூர் பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தம், மல்லிப்பட்டினம் பகுதியில் வாக்கு சேகரிக்க சென்றபோது ஒரு குறிப்பிட்ட பிரிவினர் வாக்கு சேகரிக்க வரக்கூடாது என்று தடுத்து கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
 
இதில் படுகாயம் அடைந்த 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த பகுதியில் வாக்கு சேகரிக்க காவல்துறை அனுமதி பெற்றே சென்றிருந்தனர். அப்படி இருந்தும் இந்த மோதலை தடுக்க தவறியது காவல்துறையின் மெத்தனத்தை காட்டுகிறது.

ஜனநாயக நாட்டில் வாக்கு கேட்பது எல்லா கட்சிகளின் அடிப்படை உரிமை. அதே நேரத்தில் ஒவ்வொருவரும் தங்களது விருப்பு, வெறுப்புகளை வாக்குச்சீட்டு மூலம் காட்டலாம். அதற்கு பதிலாக வன்முறையின் மூலம் தடுப்பது, வேட்பாளர் மீது தாக்குதல் நடத்துவது ஆபத்தான போக்கு ஆகும்.
 
ஏற்கனவே பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் ஏ.கே.மூர்த்தி ஆகியோர் தாக்கப்பட்டபோது காவல்துறை டி.ஜி.பி.யை சந்தித்து வேட்பாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று புகார் தெரிவித்திருந்தோம்.
 
அதன்பிறகும், சேலம், வடசென்னை உள்பட பல இடங்களில் வேட்பாளர்களை வாக்கு கேட்க விடாமல் தடுக்கும் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இது தவறான போக்கு. ஒத்துழைப்பு என்பது அனைத்து தரப்பிலும் இருக்க வேண்டும். தேர்தல் அமைதியாக நடைபெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
 
ஒரு கட்சி, ஒரு கூட்டணி என்று பார்க்காமல் எல்லா இடங்களிலும், எல்லா வேட்பாளர்களும் வாக்கு சேகரிக்க தகுந்த ஏற்பாடுகளை காவல்துறை செய்ய வேண்டும்.
 
தஞ்சாவூர் மல்லிபட்டினத்தில் நடந்த தாக்குதல் தொடர்பாக மாநில துணைத் தலைவர் சக்கரவர்த்தி தலைமையில் ஒரு குழுவினர் தேர்தல் ஆணையத்திலும், காவல்துறை டி.ஜி.பி.யிடமும் புகார் செய்கிறார்கள்.
 
காவிரி பிரச்சனையில் பாஜக அரசு தமிழர்களுக்கு துரோகம் விளைவித்ததால் அந்த கூட்டணியில் இருந்து வெளியேறியதாக ஜெயலலிதா கூறியுள்ளார். ஆனால் அதன்பிறகும் பாரதீய ஜனதாவோடு கூட்டணி வைத்திருந்ததை நாடு அறியும்.
 
நடிகர் ரஜினிகாந்தை மோடி சந்தித்ததும் அதைத் தொடர்ந்து "மோடி ஒரு திறமையான தலைவர் என்று புகழ்ந்து மோடி மனதில் என்ன நினைக்கிறாரோ அதில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்" என ரஜினி சொன்னதும் நிச்சயமாக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று வானதி கூறினார்.