1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 15 ஆகஸ்ட் 2016 (11:16 IST)

மெரினாவில் கழுத்தை அறுத்து செல்போன் பறிப்பு - கொடூர கும்பல் வெறிச்செயல்

சென்னை மெரினாவில் வாலிபரின் கழுத்தை அறுத்துவிட்டு அவரிடம் இருந்து செல்போனை பறித்து சென்றுள்ளனர். வாலிபர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 

 
வாணியம்பாடியை சேர்ந்த கார்பெண்டர் தொழிலாளி லூர்துசாமி (34). இவர், கார்பெண்டர் வேலைக்காக சென்னைக்கு வந்துள்ளார். இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் மெரினா கடற்கரைக்கு வந்துள்ளார்.
 
இரவு நேரம் காந்தி சிலை பின்புறம் அமர்ந்து இருந்த லூர்துசாமியை ஐந்து பேர் கும்பல், அவரிடம் கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். அவர்களின் மிரட்டலுக்கு பணியாத லூர்த்து சாமி அவர்களிடம் போராடியுள்ளார்.
 
அப்போது ஐந்து பேர் கொண்ட கும்பல் லூர்து சாமியை பிடித்துக்கொண்டு அவரது கழுத்தை அறுத்துவிட்டு அவரிடமிருந்த விலை உயர்ந்த செல்போனை பிடுங்கி கொண்டு ஓடிவிட்டனர். ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த லூர்து சாமி துடித்துள்ளார்.
 
உடனே அருகில் இருந்தவர்கள் லூர்துசாமியை மீட்டு உடனடியாக ராயபேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். நிலை மோசமானதை அடுத்து லூர்துசாமி ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.