1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 22 டிசம்பர் 2017 (11:57 IST)

எடப்பாடி பழனிச்சாமியை பேஸ்புக்கில் தவறாக சித்தரித்த இளைஞர் கைது!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சமூக வலைதளமான பேஸ்புக்கில் தவறாக சித்தரித்ததாக உசிலம்பட்டியை சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் குமரி மாவட்டத்தை ஓகி புயல் கடுமையாக தாக்கியது. இதனையடுத்து அங்குள்ள மக்கள் அரசு தங்கள் மீனவர்களை மீட்டு தராததாலும், நிவாரண பணிகள் எதுவும் நடைபெறவில்லை எனக்கோரி தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர்.
 
இந்நிலையில் சமீபத்தில் புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய குமரி மாவட்டத்துக்கு வருகை தந்தார் பிரதமர் மோடி. அப்போது அவரை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
 
இந்நிலையில் பிரதமர் மோடியுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கை குலுக்கும் படங்களில் மார்ஃபிங் செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் உலா வந்தது. அதில் முதல்வர் எடப்பாடியின் சட்டை பாக்கெட்டில் வழக்கமாக இருக்கும் ஜெயலலிதாவின் படத்துக்கு பதிலாக மோடியின் படம் இருப்பதாக சித்தரிக்கப்பட்டிருந்தது.
 
இந்த புகைப்படம் பேஸ்புக்கில் உலா வர, இது தொடர்பாக கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த போலீசார் உசிலம்பட்டி போலீசாரிடம் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் முதல்வரை தவறாக சித்தரித்த உசிலம்பட்டியை சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.