பெண் படைப்பாளருக்கு அம்மா இலக்கிய விருது

Ashok| Last Updated: செவ்வாய், 29 செப்டம்பர் 2015 (15:51 IST)
ஆண்டுத்தோறும் தமிழ்ப்புத்தாண்டு அன்று பெண் படைப்பாளருக்கு "அம்மா இலக்கிய விருது" வழங்கப்படும் என்று சட்டசபையில் ஜெயலலிதா அறிவித்தார்.முதல்–அமைச்சர் ஜெயலலிதா இன்று சட்டசபையில் 110–வது விதியின் கீழ் அறிக்கை வாசித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–

‘‘எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு’’ என்ற பாவேந்தரின் வரிகளுக்கேற்ப தமிழ் மொழிக்குப் பெருமை சேர்ப்பதைக் குறிக்கோளாகக் கொண்டு எனது தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. கடந்த நான்காண்டுகளில் தமிழ் வளர்க்கும் பணிகளுக்காகப் பல திட்டங்களை எனது தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது. அவ்வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தால் ஆஸ்திரேலியாவில் அடிலேய்டு நகரில் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடத்தப்பட்டது.

கடந்த நான்கு ஆண்டுகளில், தமிழ் வளர்த்த சான்றோர்களுக்கு, கபிலர், உ.வே.சா, கம்பர், சொல்லின் செல்வர், உமறுப்புலவர், ஜி.யு.போப், இளங்கோவடிகள் ஆகியோர் பெயர்களில் புதிய விருதுகளும் மேலும் தமிழ்த்தாய் விருது, கணினித் தமிழ் விருது, மற்றும் தமிழ்ச் செம்மல் விருது ஆகிய விருதுகளும் ஏற்படுத்தப்பட்டு அந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

தமிழ் மொழிக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் பின்வரும் அறிவிப்புகளை இந்த மாமன்றத்தில் வெளியிடுவதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

பாரதியாரின் அமுத மொழிக்கேற்ப, பெண் எழுத்தாளர்களைப் பெருமைப்படுத்தும் வகையில், நடப்பாண்டு முதல் மகளிர் இலக்கியங்களைப் படைப்பதில் தம்மை முழுமையாக ஈடுபடுத்தித் தொண்டாற்றி வரும் பெண் படைப்பாளர் ஒருவருக்கு ஆண்டுதோறும் ‘‘அம்மா இலக்கிய விருது’’ என்ற புதிய விருது சித்திரைத் திங்கள் தமிழ்ப் புத்தாண்டு நாளில் வழங்கப்படும்.

‘‘அம்மா இலக்கிய விருது’’ பெறுபவருக்கு ஒரு லட்சம் ரூபாய் பண முடிப்பும், தகுதியுரையும் வழங்கப்படும்.

‘பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்’ என்ற பாரதியின் கனவை நனவாக்கும் வகையில் தரமான பிறமொழி படைப்புகளைச் சிறந்த முறையில் தமிழாக்கம் செய்யும் 10 மொழி பெயர்ப்பாளர்களுக்கு ஆண்டுதோறும் சிறந்த மொழி பெயர்ப்பாளர் விருது வழங்கப்படும். இவ்விருது பெறுபவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பண முடிப்பும் தகுதியுரையும் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

பாவேந்தர் பாரதிதாசனின் புகழைப் பரப்பிடும் வகையில் அவரின் 125–ஆவது பிறந்த நாளையொட்டி 125 கவிஞர்களைக் கொண்டு, இரண்டு நாள் கவியரங்கம் ஐந்து லட்சம் ரூபாய் செலவில் நடத்தப்படும். மேலும், இந்த ஆண்டு முதல் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள், ‘தமிழ்க் கவிஞர் நாள்’ என்ற பெயரில் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இலக்கணம், இலக்கியம் மற்றும் மொழியியல் துறைகளில் சிறந்து விளங்கும் அயலகத் தமிழறிஞர்கள் மூன்று பேருக்கு ஆண்டுதோறும், சித்திரை தமிழ்ப் புத்தாண்டில் ‘உலகத் தமிழ்ச் சங்க விருதுகள்’ வழங்கப்படும். விருது பெறும் ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சம் ரூபாய் பண முடிப்பும் தகுதியுரையும் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

திருக்குறள், பாரதியார், பாரதிதாசன் பாடல்கள், சீனம் மற்றும் அரபு மொழிகளில் மொழி பெயர்க்க என்னால் ஆணையிடப்பட்டு மொழி பெயர்க்கப்பட்டு உள்ளன. தமிழ் மொழிக்கும், கொரிய மொழிக்கும் இடையே உள்ள தொடர்பின் அடிப்படையிலும், திருக்குறளை கொரிய மொழியில் மொழி பெயர்க்க வேண்டும் என்ற கொரிய மக்களின் நீண்ட நாள் கோரிக்கையின் அடிப்படையிலும், கொரியாவில் தமிழர்களும், தமிழகத்தில் கொரியர்களும், வாழ்ந்து வருவதைக் கருதியும் பார்போற்றும் உலகப் பொதுமறையாம் திருக்குறளை கொரிய மொழியில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்.

இதற்கென, முப்பத்தாறு லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், ஓரடியில் உலக மக்களுக்கேற்ற எளிய அற நெறிக்கருத்துக்களைக் கொண்ட தமிழ் மொழியின் அறநெறிக் கருவூலமான ஆத்திசூடியை சீனம் மற்றும் அரபு மொழிகளில் மொழி பெயர்த்து வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கென, பதினைந்து லட்சம் ரூபாய் ஒதுக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த அறிவிப்புகள், தமிழ் மொழியை வளர்க்கவும், தமிழுக்கு தொண்டாற்றுபவர்களை ஊக்குவிக்கவும் வழிவகுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று சட்டசபையில் கூறியுள்ளார்.
 


இதில் மேலும் படிக்கவும் :