வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : புதன், 27 ஏப்ரல் 2016 (08:30 IST)

கழுத்தை அறுத்து பெண் படுகொலை: பொள்ளாச்சி ரயில் நிலையம் அருகே பரபரப்பு

பொள்ளாச்சி ரயில் நிலையம் அருகே ஒரு பெண் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாகக் கிடந்தார்.


 

 
இது குறித்து காவல்துறையினர் தரப்பில் கூறப்படுவதாவது:–
 
பொள்ளாச்சி ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் நிறுத்துவதற்காக நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது.
 
ஆனால், அங்கு சரக்கு ரயில் போக்குவரத்து இன்னும் தொடங்கப்படவில்லை. இதனால், அப்பகுதி பொதுமக்கள் அந்த நடைமேடையில் நடைபயிற்சி சென்று வருகின்றனர்.
 
இந்நிலையில், வழக்கம் போல் அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் நடைபயிற்சிக்குச் சென்றனர். அப்போது நடைமேடை அருகிலுள்ள முட்புதரில் ஒரு பெண் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை அவர்கள் பார்த்துள்ளனர்.
 
இது குறித்து காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலின் பேரில் அங்கு வந்த காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தினர்.
 
இதைத் தொடர்ந்து, அந்த பெண்ணின் உடல் அருகே கிடந்த பையில் ஒரு நோட்டு இருந்து அதை ஆய்வு செய்தபோது, அவர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரை சேர்ந்த பெருமாள் என்பவரது மனைவி மாலதி என்பது தெரியவந்தது.

அவர் திண்டுக்கல்லில் வசித்து வந்ததும் தெரியவந்தது. அத்துடன், அவர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருதற்கான மருத்துவ குறிப்புகளும் அந்த பையில் இருந்தது.

எனினும், அவர் எதற்காக பொள்ளாச்சிக்கு வந்தார் என்பது தெரியவில்லை. இதைத் தொடர்ந்து, காவல்துறையினர் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் கொலையாளியை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.