1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 5 டிசம்பர் 2024 (13:19 IST)

அமைச்சரும், திமுகவினரும் கழிவுநீர் கலந்த குடிநீரைக் குடிப்பார்களா? அண்ணாமலை கேள்வி..!

Annamalai
அமைச்சரும், திமுகவினரும் அந்தப் பகுதியில் வழங்கப்படும் குடிநீரைக் குடிக்க முன்வருவார்களா? என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
சென்னை பல்லாவரம் அருகே, குடிநீரில் கழிவு நீர் கலந்ததால், உடல் நலம் பாதிக்கப்பட்டு, 23 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதும், மூன்று உயிரிழந்திருப்பதும் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. உயிரிழந்தவர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். உடல் நலம் பாதிக்கப்பட்ட அனைவரும் விரைவாக நலம்பெற வேண்டும் கொள்கிறேன். 
 
இது குறித்து கேள்வி எழுப்பிய ஊடகவியலாளர்களிடம், குடிநீரில் கழிவு நீர் கலந்திருந்தால், 300 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டிருப்பார்கள். ஆனால் 20 பேர் மட்டும்தான் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மக்கள் மீது தான் தவறு இருக்கிறது என்று திமிராகப் பதிலளித்துள்ளார் அமைச்சர் திரு. தா.மோ.அன்பரசன். குடிநீரில் கழிவு நீர் கலக்கவில்லை என்றால், அமைச்சரும், திமுகவினரும் அந்தப் பகுதியில் வழங்கப்படும் குடிநீரைக் குடிக்க முன்வருவார்களா? 
 
அதுமட்டுமின்றி, தெருக்களில் ப்ளீச்சிங் பவுடருக்குப் பதிலாக, மைதா மாவு தூவப்பட்டதா என்ற கேள்வியை எழுப்பிய ஊடக சகோதரரிடம், ப்ளீச்சிங் பவுடர் விலை ரூ. 10 - 13 தான் என்கிறார் அமைச்சர் திரு. தா.மோ.அன்பரசன். ஆனால், ப்ளீச்சிங் பவுடரை ஏன் ரூ.55க்கு மாநகராட்சி கொள்முதல் செய்திருக்கிறது என்ற ஊடக சகோதரரின் கேள்விக்கு அமைச்சரிடம் பதில் இல்லை.
 
எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என, மக்கள் நலன் குறித்த அக்கறை சிறிதும் இன்றிச் செயல்படும் இந்த மக்கள் விரோத அரசால், அப்பாவி பொதுமக்கள் தினம் தினம் உயிரிழப்பு வரை பாதிக்கப்பட்டும், சிறிதும் வெட்கமே இன்றி, திராவிட மாடல் அரசு என்று விளம்பரம் செய்து கொண்டிருக்கும் முதலமைச்சர் திரு.ஸ்டாலினுக்கு, உண்மையில் கள நிலவரங்கள் தெரிவிக்கப்படுகின்றனவா என்ற கேள்வி வலுப்படுகிறது.
 
 
Edited by Mahendran