1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 24 ஜூன் 2019 (08:08 IST)

10 ரூபாய் நாணயங்கள் வாங்க வேண்டாம்: போக்குவரத்து பணிமனையின் சுற்றறிக்கையால் பரபரப்பு!

10 ரூபாய் நாணயங்கள் செல்லுமா? செல்லாதா? என மக்கள் மத்தியில் ஏற்கனவே சந்தேகங்கள் இருந்து வருகிறது. ஒருசில வணிகர்கள் 10 ரூபாய் நாணயங்களை வாங்குவதில் தயக்கம் காட்டுகின்றனர். சிலர் வாங்க மறுத்தும் வருகின்றனர். இந்த நிலையில் பயணிகளிடம் 10 ரூபாய் நாணயங்கள் வாங்குவதை நடத்துனர்கள் தவிர்க்க வேண்டும் என  திருப்பூர் போக்குவரத்து பணிமனை இரண்டாவது மண்டலத்தில் சுற்றறிக்கை ஒன்று ஒட்டப்பட்டிருந்தது.
 
இந்த சுற்றறிக்கையை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் சிலர் வைரலாக்கினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அரசு நிறுவனமே 10 ரூபாய் நாணயங்களை வாங்க வேண்டாம் என்று சுற்றறிக்கை விட்டதால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது. இந்த நிலையில் திருப்பூர் போக்குவரத்து பணிமனை தனது சுற்றறிக்கையை திரும்ப பெற்று கொண்டதோடு அதற்கான விளக்கம் ஒன்றையும் அளித்துள்ளது
 
போக்குவரத்து நடத்துனர்களால் வசூலிக்கப்படும் 10 ரூபாய் நாணயங்களை வங்கியில் பணம் செலுத்தும் போது ஒருசில இடையூறுகள் ஏற்படுவதாகவும், இந்த இடையூறுகளை தவிர்க்கவே அவ்வாறு சுற்றறிக்கை ஒட்டப்பட்டதாகவும், ஆனால் பொது மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்ததால் அதனை திரும்பப் பெற்றதாகவும் பணிமனை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.