1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 3 அக்டோபர் 2016 (16:02 IST)

தலைமைச் செயலகம் ‘டூ’ மருத்துவமனை; மருத்துவமனை ‘டூ’ தலைமைச் செயலகம் - விஜயகாந்த் கொந்தளிப்பு

தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்றினீர்கள், இப்பொழுது மருத்துவமனையையே தலைமைச் செயலகமாக மாறி இருப்பது வருத்தம் அளிக்கிறது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
 

 
இது குறித்து விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில், ”தமிழகத்தில் நடக்கப் போகும் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்றோடு முடியும் நிலையில், நடக்க இருக்கும் உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாகவும், உரிய பாதுகாப்புடன் மக்கள் வாக்களிக்கும் வகையில் இந்த தேர்தலை நடத்திட தேர்தல் ஆணையமும், ஆளும்கட்சியும் மக்களுக்கு நம்பிக்கை தர வேண்டியது அவசியமாகிறது.
 
இன்றைய நிலையில் தமிழ்நாட்டில் நிரந்தர கவர்னர் இல்லாத நிலையிலும், ஒரு மருத்துவமனையில் பன்னிரண்டு நாட்களுக்கு மேல் அனுமதிக்கப்பட்டு, செயல்படாத முதல்வரை கொண்டதாகவும் உள்ளது. தமிழகத்தில் நடக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு உடனடி கவனம் செலுத்தி உரிய முடிவுகளை எடுக்க முடியாத அரசாக இந்த அரசு உள்ளது.
 
எனவே முதல்வரின் உடல்நிலை முழுவதும் சீராகும் வரை அந்த பொறுப்புக்கு வேறு ஒரு நபரை இந்த அரசு தேர்ந்தெடுக்க வேண்டும். மருத்துவமனையில் நடக்கும் உண்மை நிலையை மக்களுக்கு அறிவிக்கும் வண்ணம் முதல்வர் தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டும்.
 
இந்தக் கருத்தை வலியுறுத்தி அனைத்து எதிர்க் கட்சியினர் கேட்டும், செவிடன் காதில் ஊதிய சங்கு போல இந்த அரசு செயல்படுவது முறையல்ல. நீங்கள் எதிர்க் கட்சி தலைவராகவோ அல்லது ஆட்சியில் இல்லாதவராகவோ இருந்தால் இதுபற்றி யாரும் பேசவேண்டிய அவசியமில்லை. ஆளும் முதல்வர், வாக்களித்த மக்களுக்கு உங்கள் விளக்கத்தை தர வேண்டியது மிக முக்கியமாகும்.
 
தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்றினீர்கள், இப்பொழுது மருத்துவமனையையே தலைமைச் செயலகமாக மாறி இருப்பது வருத்தம் அளிக்கிறது. அரசு தொய்வில்லாமல் செயல்படுவதைப் போல் மக்களை நம்பவைத்து கொண்டிருக்கிறார்கள். மனிதராகப் பிறந்த அனைவருக்கும் உடல்நிலை சரியில்லாமல் போவதும், பின் குணமடைவதும் இயற்கையான ஒன்று. எனவே மூடி மறைக்க வேண்டிய அவசியமில்லை என்பதைக் கருத்தில் கொண்டு உரிய அறிவிப்பை இந்த அரசு உடனே மேற்கொள்ளவேண்டும்.
 
லண்டனில் இருந்து வந்த மருத்துவர் மேலும் சில நாள் ஜெயலலிதா ஓய்வு எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். முதல்வரின் உடல்நிலை பற்றி அப்போலோ மருத்துவமனை தான் அதிகாரபூர்வ அறிக்கையை தருகிறது. கவர்னர் வித்யாசாகர் தந்த அறிவிப்பை யாரும் ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் உள்ளது. உரியவர்கள் தான் இதற்கு பதில் அளிக்க வேண்டும், உண்மை நிலையை ஜெயலலிதாவே தன்னிலை விளக்கம் கொடுத்துவிட்டால் தொடர்ந்து மக்களிடையே பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.