ஜெ.வின் மரணத்திற்கு விசாரணை கமிஷன் கேட்பது இதற்காகவே! - தீபக் அதிரடி
தனது அத்தை ஜெ.வின் மரணத்திற்கு விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைப்பதன் பின்னணியை ஜெ.வின் அண்ணன் மகன் தீபக் விளக்கியுள்ளார்.
இதுநாள் வரை சசிகலா தரப்பிற்கு ஆதரவு தெரிவித்து வந்த ஜெ.வின் அண்ணன் மகன் தீபக், நேற்று திடீரெனெ ஓ.பி.எஸ் பக்கம் சாய்ந்துள்ளர். மேலும், அதிமுக தலைமை பொறுப்பை ஏற்கும் தகுதி தினகரனுக்கு இல்லை என அவர் அதிரடியாக பேசியுள்ளார். சசிகலாவிற்கு தான் எதிரியில்லை எனவும், ஆனால், ஒரு குடும்பத்தின் கையில் அதிமுக சிக்கியிருப்பதை தான் விரும்பவில்லை எனவும் அவர் கூறியிருந்தார்.
அதேபோல், ஜெ.வின் மரணம் குறித்து எல்லோரும் சந்தேகத்தை எழுப்பிய போது, அதில் எந்த மர்மமும் இல்லை. நான் அப்பல்லோ மருத்துவமனையிலேயே 75 நாட்கள் இருந்தேன். எனவே அது குறித்த விசாரணையே தேவையில்லை என தீபக் முன்பு கூறியிருந்தார்.
ஆனால், தற்போது ஜெ.மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என அவர் கருத்து தெரிவித்துள்ளார். இந்த முரண்பாடு பற்றி கேள்வி எழுந்துள்ள நிலையில், இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய தீபக் “என்னைப் பொறுத்த வரை, எனது அத்தை ஜெ.வின் மரணத்தில் எந்த மர்மமும் இல்லை. ஏனெனில் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட போது அவரை நான் பார்த்துள்ளேன். ஆனால், அவரது மரணம் குறித்து பலருக்கும் சந்தேகம் இருக்கிறது. எனவே, அதைப் போக்க வேண்டுமானால் விசாரணைக் கமிஷன் அமைப்பதில் தவறில்லை என்பதுதான் என் கருத்து” என அவர் கூறினார்.