மாநிலங்களவைக்கான திமுக வேட்பாளர்கள் யார்? - கருணாநிதி அறிவிப்பு


லெனின் அகத்தியநாடன்| Last Updated: ஞாயிறு, 22 மே 2016 (20:16 IST)
மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர்களாக, அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
 
 
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கே.பி.ராமலிங்கம், எஸ்.தங்கவேலு (திமுக), சுதர்சன நாச்சியப்பன் (காங்கிரஸ்), ஏ.நவநீதகிருஷ்ணன், பால் மனோஜ்பாண்டியன், ஏ.டபிள்யூ. ரபி பெர்னார்ட் (அதிமுக) ஆகிய 6 பேரின் பதவிக்காலம் நிறைவடைகிறது.
 
இந்த காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்தல் ஜூன் 11ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் யார்? என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
 
அப்போது, திமுக அமைப்புச் செயலாளர் வழக்கறிஞர் ஆலந்தூர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்படுவார்கள் என்று கருணாநிதி தெரிவித்தார்.
 
சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 134 இடங்களிலும், திமுக கூட்டணி 98 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடத்தைப் பெற 34 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. அதன்படி அதிமுக 3, திமுக 2 இடங்களில் எளிதாக வெற்றி பெறும். 6-வது இடமும் அதிமுகவுக்கு கிடைப்பதற்கான வாய்ப்பே அதிகம் உள்ளது.
 


இதில் மேலும் படிக்கவும் :