வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: திங்கள், 2 நவம்பர் 2015 (00:22 IST)

எனது மனதை நெகிழவைத்த சம்பவம்: சொல்கிறார் மு.க.ஸ்டாலின்

நடைப்பயணத்தின் போது என்னை நெருங்கி வந்த ஒரு மூதாட்டி என்னை அன்போடு முத்தமிட்டு உச்சி முகர்ந்த சம்பவம் மனதை நெகிழ வைத்தது என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
மூன்றாவது கட்டமாக நடைபெறும் நமக்கு நாமே விடியல் மீட்பு பயணத்தின் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்டத்தில் மு.க.ஸ்டாலின்  பயணம் தொடர்ந்தது.
 

 
அப்போது திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
கடந்த 1989 ஆம் ஆண்டு இதே தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூரில் முதன்முதலாக மகளிர் சுய உதவி குழுக்களை திமுக தொடங்கியது. அங்கு நான் சென்றபோது, அங்கிருந்தவர்கள் முதன் முதலில் தொடங்கப்பட்ட மகளிர் குழுவின் தலைவியாக குப்பம்மாள் என்பவர் செயல்பட்டதை நினைவு கூர்ந்து, அப்போது பயன்படுத்தப்பட்ட தீர்மானப் புத்தகங்களையும் என்னிடம் காண்பித்தனர்.
 
அப்போது பேசிய நவநீதம் என்ற இளம்பெண், மகளிர் சுய உதவிக்குழுவில் சேர்ந்த பிறகே தான் சேமிப்பின் தேவையை புரிந்து கொண்டதாக தெரிவித்தார். பெண்களின் பொருளாதாரரீதியாக முன்னேற்றத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் முக்கிய பங்காற்றுகின்றன. திமுகவின் முயற்சியால் இன்று தமிழ்நாடு முழுவதும் 4,41,311 மகளிர் சுய உதவிக்குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
 
ஆனால் இன்றைய அதிமுக அரசு மகளிர் சுய உதவிக்குழுக்களின் எண்ணிக்கையை பெருமளவில் குறைத்து, அவர்களுக்கு வழங்க வேண்டிய கடனுதவிகளையும் மனசாட்சியே இல்லாமல் வழங்காமல் நிறுத்தி வருவதாக அறிந்து மன வேதனையடைந்தேன்.
 
அங்கிருந்து வேலம்பட்டி கிராமத்துக்கு சென்றபோது சுத்திகரிக்கப்படாத நிலத்தடி நீரில் ப்ளோரைடு மற்றும் மோசமான ரசாயனப் பொருட்கள் அதிகரத்து ஏராளமான கிராம மக்களும் சிறுவர்களும் பலவித நோய்களால் பாதிக்கப்டடு இருப்பது தெரிய வந்தது.
 
மேலும், அங்கிருந்த குடிநீர் தொட்டிகள் காலியாகவே இருப்பதை சுட்டிக்காட்டிய அந்த கிராமத்தினர் திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டு கிட்டதட்ட 90℅ வரை பணிகள் முடித்து செயல்பாட்டுக்கு வந்திருக்க வேண்டிய ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் இன்றைய ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் கிடப்பில் போடப்பட்டிருப்பதாக தெரிவித்தனர். திமுகவினர் மற்றும் பொதுமக்கள் பலகட்ட போராட்டங்களை மேற்கொண்ட பிறகு மீதமிருந்த பணிகளை வேறு வழியில்லாமல் அரசு முடித்தும் இன்னும் 200க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் வரவில்லை.
 
குடிநீர் பிரச்சினையை தீர்க்க இந்த அரசு இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது எனக்குள் உண்மையாகவே கோபத்தை ஏற்படுத்துகிறது.
 
பாப்பி ரெட்டிப்பட்டி போன்ற பல கிராமத்தினரும் இதேபோல தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்துவதுடன், அப்பகுதிகளை சேர்ந்தவர்கள் உரிய சான்றிதழ்களை வைத்திருந்தாலும் அவர்களுக்கு முதியோர் உதவித்தொகையை இந்த அரசு வழங்க மறுப்பதாக தெரிவித்தனர்.
 
திமுகழகம் ஆட்சியில் அமர்ந்ததும் அவர்களது பிரச்சனைகள் அனைத்தும் முழுவதுமாக தீர்த்து வைக்கப்படும் என அவர்களுக்கு உறுதியளித்தேன். இன்றைய பயணத்தின் இறுதியில் மாணவ சமுதாயத்தினருடன் கலந்துரையாடினேன். அரசு வேலை வாய்ப்பு அலுவலகங்களை மறு சீரமைப்பதன் மூலமாக, வேலையில்லா திண்டாட்டம் குறித்த அவர்களது அச்சம் நீங்க திமுக நடவடிக்கை எடுக்கும்.
 
திமுக ஆட்சி பொறுப்பில் அமர்ந்ததும் இதுவரை இல்லாத வகையில் புதிய பல திட்டங்களை செயல்படுத்தி தொழில் முனைவோர்கள் ஊக்குவிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.