3 தொகுதிகளுக்கு தேர்தல் எப்போது?
நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளில் பணப்பட்டுவாடா உள்ளிட்ட பிரச்சனைகளால், தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது.
அதேபோல் திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக எம்எல்ஏ சீனிவேல் மரணமடைந்ததை அடுத்து 3 தொகுதிகளும் சட்டசபையில் பிரதிநிதித்துவம் இல்லாமல் காலியாக உள்ளன.
காலியாக உள்ள இந்த மூன்று தொகுதிகளுக்கும் 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்படவேண்டும். தலைமை தேர்தல் ஆணையம் நடத்தை விதிப்படி இந்த 3 தொகுதிகளிலும் வரும் நவம்பர் மாதத்துக்குள் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும்.
எனவே தேர்தல் அதிகாரிகள் எப்போது தேர்தலை நடத்தலாம் என்று ஆய்வு செய்து வருகிறார்கள். அக்டோபர் மாதம் 2-வது வாரம் தேர்தலை நடத்தலாமா என்று கருத்துக் கேட்டுள்ளனர்.
தமிழக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் அக்டோபர் மாத இறுதியில் முடிகிறது. எனவே உள்ளாட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் மூன்றாவது வார இறுதியில் தேர்தல் நடத்தப்பட உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை தமிழக தேர்தல் அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.
அக்டோபர் மாதம் ஆயுத பூஜை, மொஹரம், தீபாவளி, கந்த சஷ்டி ஆகிய திருவிழாக்கள் வர உள்ளதால் அதற்கு ஏற்ப 3 தொகுதிகளின் தேர்தல் தேதியை முடிவுசெய்ய வேண்டிய நிலை தேர்தல் அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
எனவே தற்போதைய சூழ்நிலையில் அக்டோபர் மாதம் 2-வது வாரம் உகந்ததாக இருப்பதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் கருதுகிறார்கள். எனவே, தமிழக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுவதற்கு முன்பே 3 தொகுதியிலும் தேர்தல் நடத்தப்படும் என்பது உறுதியாகி உள்ளது.