வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: திங்கள், 18 மே 2015 (12:00 IST)

50 ஆண்டுகளில் நடக்காததை 5 ஆண்டுகளில் செய்து காட்டுவோம் - அன்புமணி சவால்!

தமிழகத்தை ஆள்வதற்கு பலருக்கு நீங்கள் வாய்ப்பு அளித்துள்ளீர்கள். தற்போது எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளில் நடக்காததை 5 ஆண்டுகளில் செய்து காட்டுவோம் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
 
Anbumani Ramadoss
அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் சோழ மண்டல மாநாடு, வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு மாநில துணை பொதுச்செயலாளர்கள் வைத்திலிங்கம், ஆலயமணி, திருஞானம், தர்மலிங்கம், அரியப்பன்  முன்னிலை வகித்தனர்.
 
இந்த மாநாட்டில், பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய அமைச்சர்கள்  ஏ.கே.மூர்த்தி, ஆர்.வேலு ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
இந்த  மாநாட்டில் பாமக இளைஞர் அணி தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:–
 
தமிழகத்தை திமுகவும், அதிமுகவும் மாறி மாறி ஆட்சி செய்து நாசம் செய்துவிட்டன. தமிழகத்திற்கு பெரிய அளவில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. தமிழக மக்கள் ஒரு மாற்றம் வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். அதை உணர்ந்து நாங்கள் தற்போது முழுமையான எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறோம். தமிழகத்தில் பாமக மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்து வருகிறது. நாங்கள் இளைஞர்களை மட்டுமே நம்பி தேர்தலில் போட்டியிடுகிறோம்.
 
தமிழக மக்கள் நலன் கருதி, சேவை உரிமை சட்டம், லோக் ஆயுக்தா ஆகியவற்றை கொண்டு வருவோம். வெளிப்படையான நிர்வாகத்தை நடத்துவோம். நான் போடும் முதல் கையெழுத்தே மதுக்கடைகளை மூடுவதாகத்தான் இருக்கும்.
 
இதுவரையில் தமிழகத்தை ஆள்வதற்கு பலருக்கு நீங்கள் வாய்ப்பு அளித்துள்ளீர்கள். தற்போது எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கல்வி, மருத்துவம், விவசாயம், வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிப்போம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளில் நடக்காததை 5 ஆண்டுகளில் செய்து காட்டுவோம்.
 
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு நான் மூன்று முறை கடிதம் எழுதியுள்ளேன். அதற்கு அவரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. தற்போது உள்ள எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த், கடந்த 4 ஆண்டுகளாக எதிர்க்கட்சி தலைவராகவே செயல்படவில்லை. தேர்தல் நெருங்குவதால் இப்போது அவர் அரசியல் செய்து வருகிறார்.
 
நாங்கள் யாருடனும் கூட்டணி சேர மாட்டோம். தனித்தே போட்டியிடுவோம். பாமகவில் என்னை முதல்வர் வேட்பாளராக அறிவித்தது போல், மற்ற கட்சியினரும் முதல்வர் வேட்பாளரை அறிவிக்க தயங்குவது ஏன்?
 
எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள், நாங்கள் ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தின் தலையெழுத்தையே மாற்றிக்காட்டுவோம் என்றார்.