புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 16 அக்டோபர் 2018 (11:57 IST)

சென்னையில் குடிநீர் தட்டுபாடு அபாயம் –மக்கள் பீதி

சென்னை உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் டேங்கர் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் குடிநீர் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 3 ஆம் தேதி ஒரு முக்கியமானத் தீர்ப்பை அறிவித்தது. அதில் ‘சட்டவிரோதமாக நிலத்தடிநீரை உறிஞ்சுவதற்கு தடை விதித்தும் வணிக பயன்பாட்டிற்காக நிலத்தடி நீர் எடுப்பதை முறைப்படுத்த வேண்டும்’ என்றும் கூறியது. இந்த எதிர்ப்பு தெரிவித்த லாரி உரிமையாளர்கள் தற்போது கால வரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்கள் தங்கள் கோரிக்கையாக இந்த தடையை நீக்க வேண்டுமெனவும் மேலும் கனிமவளப் பிரிவிலிருந்து நிலத்தடி நீரை நீக்க வேண்டுமெனவும் கூறியுள்ளனர். இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் குடிநீர் விநியோகித்து வந்த 4100 லாரிகள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
இதுகுறித்து ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி சம்மந்தப்பட்ட அதிகாரிகளோடு ஆலைசனை நடத்தினார். வேலைநிறுத்தத்தால் பாதிக்கப்பட்ட கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் மற்றும் வனிக வளாகங்களுக்கு உடனடியாக தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.

’பாதிக்கப்பட்ட நுகர்வோர் தங்கள் லாரிகளில் சென்னை குடிநீர் வாரிய லாரி நீர்நிரப்பு நிலையங்களில் இரவு 10 மணிமுதல் காலை 5 மணி வரை நீரைப் பெற்றுக்கொள்ளலாம். இதற்கு ஒருவாரத்திற்கு தேவையான குடிநீர் கட்டணத்தை முன்பணமாக செலுத்த வேண்டும். ஒரு நாளுக்கு அதிகபட்சமாக் 2 லாரி தண்ணீர் வழங்கப்படும்’ என தமிழக அரசு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.