வெள்ளி, 8 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 9 மே 2024 (15:30 IST)

அரசு உதவித்தொகையுடன் தொழிற்பயிற்சி.. 8, 10-ம் வகுப்பு தேர்ச்சி போதும்! – விண்ணப்பிப்பது எப்படி?

Tamilnadu ITI
தமிழ்நாட்டில் 8 மற்றும் 10 ம் வகுப்பு வரை படித்த மாணவர்களுக்கான தொழிற்பயிற்சி வகுப்புகளுக்கான சேர்க்கை நாளை முதல் தொடங்குகிறது.



தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் என மொத்தம் 407 தொழிற்பயிற்சி மையங்கள் தமிழக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் செயல்பட்டு வருகின்றன.

இந்த பயிற்சி மையங்களில் எலெக்ட்ரீசியன், வெல்டர், மெக்கானிக் என பொறியியல் தொழிற் கல்வியில் 61 வகை படிப்புகளும், பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் உணவு தயாரிப்பு, தையல் வேலை, நிழற்பட கலைஞர், பிசியோதெரபி என 28 வகை படிப்புகள் வழங்கப்படுகிறது.

இந்த தொழிற்பயிற்சி மையங்களில் சேரும் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக தமிழக அரசு மாணவர்களுக்கு மாதம்தோறும் ரூ.750 ஊக்கத்தொகை, இலவச மிதிவண்டி, மடிக்கணினி, படிப்பு சார்ந்த உபகரணங்கள், கருவிகள் ஆகியவற்றை மாணவர்களுக்கு வழங்குகிறது. மேலும் படிப்பு முடியும்போது முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பையும் ஏற்படுத்தி தருகிறது.

இந்த தொழிற்கல்வி படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் 8வது அல்லது 10வது தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம். இந்த படிப்புகளில் சேர வயது வரம்பு 14 முதல் 40 வரை உள்ளது. பெண்களுக்கு வயது வரம்பு கிடையாது.

இந்த தொழிற்பயிற்சி படிப்புகளுக்கு நாளை முதல் ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க கடைசி தேதி 07.06.2024. விண்ணப்பங்களை https://skilltraining.tn.gov.in/ என்ற வலைதளத்தின் மூலம் மேற்கொள்ள முடியும். ஆன்லைனில் நேரடியாக விண்ணப்பிக்க வசதியில்லாத மாணவர்கள் தமிழ்நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 136 உதவி மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

இதுதொடர்பான சந்தேகங்கள் மற்றும் விவரங்களை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியிலும், 9499055612 என்ற வாட்ஸப் எண்ணிலும் கேட்டு பெறலாம்.

என்னென்ன படிப்புகள் உள்ளன என்பது குறித்த மேலதிக விவரங்களை https://skilltraining.tn.gov.in/assets/pdf/tp.pdf இந்த அறிவிப்பில் காணலாம்.

Edit by Prasanth.K