1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: திங்கள், 1 மே 2017 (11:52 IST)

விவேக்கின் பலே அரசியல்: செந்தில் பாலாஜியை இயக்கும் தந்திரம்?

விவேக்கின் பலே அரசியல்: செந்தில் பாலாஜியை இயக்கும் தந்திரம்?

அதிமுக துணைப் பொதுச்செயலாளராக உள்ள டிடிவி தினகரனை ஒதுக்கி வைப்பதாக அதிமுக அமைச்சர்கள் கூறியதை அடுத்து அந்த பதவிக்கு அடுத்ததாக இளவரசியின் மகன் விவேக் வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்காக விவேக் செந்தில் பாலாஜியை பயன்படுத்துவதாக அதிமுக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.


 
 
சசிகலா சிறைக்கு செல்லும் முன்னர் கட்சியை தனது குடும்பத்தின் கட்டுப்பாட்டில் வைக்க தனது அக்கா மகன் தினகரனை கட்சியில் மீண்டும் சேர்த்து துணைப் பொதுச்செயலாளர் பதவியை வழங்கினார்.
 
தினகரன் அதன் பின்னர் சசிகலாவின் பேச்சை மீறி ஆர்கே நகர் தேர்தலில் போட்டியிட்டதாகவும் இதனால் அவர் மீது சசிகலா அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுத்ததாக தினகரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்போது போலீஸ் காவலில் உள்ளார்.
 
இந்த இடைவெளியில் அதிமுக அமைச்சர்களும் தினகரனை ஒதுக்கி வைப்பதாக அறிவித்துள்ளனர். இதனால் அதிமுக தலைமை இல்லாமல் தள்ளாடுகிறது. இந்நிலையில் சசிகலாவுடன் சிறையில் இருக்கும் இளவரசியின் மகன் விவேக் ஜெயராமனை துணைப் பொதுச்செயலாளராக நியமிக்க சசிகலா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
 
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மூலம் விவேக் காய்களை நகர்த்தி வருவதாகவும், செந்தில் பாலாஜி சில தினங்களுக்கு முன்பு 19 எம்எல்ஏக்களிடம் பேசி விவேக்கை ஆதரிக்க சம்மதம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மொத்தம் 30 எம்எல்ஏக்கள் செந்தில்பாலாஜி உதவியோடு, விவேக் பக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.
 
அந்த தைரியத்தில்தான் செந்தில் பாலாஜி தனது தொகுதியில் மருத்துவக்கல்லூரி வர முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர் தடையாக இருப்பதாக கூறி உண்ணாவிரதம் இருக்கப்போவதாக கூறிவருவதாக பேசப்படுகிறது.
 
விவேக்கிற்கு 30 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதால், ஓபிஎஸ் அல்லது எடப்பாடி பழனிச்சாமி யாராக இருந்தாலும் சசிகலா குடும்பத்தை அதிமுகவில் இருந்து விலக்கினால் அவர்கள் ஆட்சியை இழக்க வேண்டிய நிலை ஏற்படும் என கூறப்படுகிறது.