புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 6 டிசம்பர் 2017 (17:41 IST)

ராஜேஷ் லக்கானியுடன் விஷால் சந்திப்பு: மீண்டும் வேட்புமனு மறுபரிசீலனையா?

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட சுயேட்சை வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்த நடிகர் விஷாலின் வேட்புமனு நேற்று தேர்தல் அதிகாரியால் நிராகரிக்கப்பட்டது. விஷாலை முன்மொழிந்த இருவரது கையெழுத்து போலி என்ற குற்றச்சாட்டு காரணமாக அவரது மனு நிராகரிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த நடிகர் விஷால் இன்று தலைமை தேர்தல் ஆணையரிடம் புகார் அளிக்கவுள்ளதாக இன்று காலை செய்திகள் வெளிவந்தன. இதன்படி சற்றுமுன்னர் சென்னை தலைமைச்செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி அவர்களை விஷால் சந்தித்து தனது வேட்புமனுவை மறுபரிசீலனை செய்யும் கோரிக்கை மனுவை கொடுத்தார்.

இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஷால், 'தேர்தல் அதிகாரி என்னுடைய வேட்புமனுவை ஏற்றுக்கொண்டதாக அறிவித்தது அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியிருப்பதாகவும், அந்த கேமிராவில் உள்ள காட்சிகளை பார்த்து தலைமை தேர்தல் அதிகாரி முடிவெடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டதாகவும் கூறினார். எனவே விஷாலின் வேட்புமனு மறுபரிசீலனை செய்யப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்