1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : சனி, 31 மே 2014 (18:04 IST)

தமிழக அரசின் திட்ட செயல்பாடுகள் - மோடிக்கு விஜயகாந்த் கடிதம்

தமிழக அரசின் திட்ட செயல்பாடுகளை கண்காணித்து வழி நடத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு, தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் கடிதம் எழுதியுள்ளார்.
கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:–
 
"இந்திய நாட்டை வளர்ச்சிப்பாதையில் எடுத்துச்செல்லத்தேவையான நேர்மையும், தைரியமும், தேசப்பற்றும் கொண்ட தலைவர் நீங்கள். நமது தேசிய ஜனநாயகக்கூட்டணி, வரலாற்றுச சிறப்புமிக்க வெற்றிக் கூட்டணி என்பதை நிரூபித்து, அதன் சார்பில் பாரத பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள உங்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தங்கள் தலைமையில் அமைந்துள்ள மத்திய அரசு, தமிழகத்தில் உள்ள கீழ்க்கண்ட முக்கிய பிரச்சினைகளைத் தீர்க்க ஆவன செய்ய வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
 
தமிழகத்தில் 70 சதவிகிதத்திற்கும் அதிகமான மக்கள் விவசாயத்தை நம்பியுள்ளனர். சமீப காலமாக விவசாயத்திற்கு போதுமான நீர் ஆதாரம் இல்லாததால் விவசாய உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்பட்டு, தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, நாட்டிலுள்ள நதிகளை தேசிய மயமாக்கி, அவற்றை இணைத்து, தமிழகத்தின் நீர் ஆதாரத்தை உயர்த்தி, விவசாயம் பெருகவும், விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரவும் வழிவகை காண வேண்டும்.
 
தமிழ்நாட்டிற்கான மின் ஒதுக்கீட்டினை அதிகரித்து, தடையில்லா மின்சாரம் கொண்டு வந்து, தொழில் உற்பத்தியைப் பெருக்கி, படித்த, மற்றும் படிக்காத இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும்.
 
தமிழகத்தின் தென் கடற்கரையோர மாவட்டங்களில் மணல் மற்றும் கனிம வள கொள்ளை அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் மத்திய, மாநில அரசுகளுக்கான நிதி வருவாய் இழப்பு பெருமளவு அதிகரித்துள்ளது. இந்த கனிம வளங்களைப் பாதுகாக்க இன்னும் கடுமையான சட்டங்களை நடைமுறைப்படுத்திட வேண்டும்.
 
இலங்கை கடற்படையினரால் அன்றாடம் தாக்குதலுக்கு உள்ளாகும் தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். இலங்கை நமது நட்பு நாடு என்ற பெருந்தன்மையோடு இந்தியா நடந்து கொண்டாலும், இலங்கை அதை மதிப்பதில்லை. அங்கு வாழும் தமிழர்கள் போரினால் மிகவும் பாதிக்கப்பட்டு, மனதளவிலும், உடல் அளவிலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்கள் பகுதிகளில் மீண்டும் குடியேற்றப்பட்டு, அனைத்து மனித உரிமைகளோடு, சிங்களர்களுக்கு இணையாக தமிழர்களும் நடத்தப்படுவதை தங்கள் தலைமையிலான அரசு ஏற்படுத்திட வேண்டும்.
 
உயர் கல்வி மற்றும் பள்ளிக்கல்வி தனியார்மயமாக்கப்பட்டதால், தரமான கல்வி என்பது ஏழைகளுக்கு எட்டாக்கனியாகவே உள்ளது. எல்லோருக்கும் சமச்சீரான கல்வி வாய்ப்பு கிடைத்திட அரசுப் பள்ளி, மற்றும் கல்லூரிகளின் எண்ணிக்கையை உயர்த்தி, அதன் தரத்தையும் உயர்த்திட வேண்டும்.
 
தமிழ்நாட்டிற்கு மத்திய அரசின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலை திட்டம், மேம்பாலங்கள் போன்றவை மாநில அரசின் ஒத்துழைப்பு இன்மையால் நிர்ணயிக்கப்பட்ட கால அவகாசத்தில் நிறைவேற்றப்படாததால் மாநில வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
இவைகள் மாநில நிர்வாகத்தின் கீழ் வந்தாலும், பிரச்சினைகளின் முக்கியத்துவத்தைக் கருதி, தனி கவனம் செலுத்தி போர்க்கால அடிப்படையில், மத்திய அரசு, மாநில அரசு, மற்றும் எதிர்க்கட்சிகள் கொண்ட கூட்டு குழுவை அமைத்து, தமிழக அரசின் திட்ட செயல்பாடுகளை கண்காணித்து வழி நடத்துதலை தங்கள் தலைமையில் அமைந்துள்ள அரசு செய்யவேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்". இவ்வாறு அந்த கடிதத்தில் விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார்.