தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியின் தோல்விக்கு விஜயகாந்த், ராமதாஸ் சண்டையே காரணம் என்று தமிழருவி மணியன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
நரேந்திர மோடிக்கான ஆதரவு அலையும், காங்கிரசுக்கு எதிரான சூறாவளியும் சேர்ந்துதான் 30 ஆண்டுகளுக்குப் பின்பு மத்தியில் தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளது.
போலி மதச்சார்பின்மையும், ஜாதிய அழிவு சக்திகளும் இந்த தேர்தலில் பரிதாபகரமான முடிவைச் சந்தித்துள்ளன. மாயாவதி, முலாயம்சிங், லல்லு பிரசாத் யாதவ் போன்றோரின் வீழ்ச்சியும், காங்கிரசின் வரலாறு காணாத தோல்வியும் ஜாதி மதங்களைப் பயன்படுத்தி மக்களைப் பிளவுப்படுத்தும் இழிந்த அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முதல் முயற்சியாக அமைந்திருப்பது வரவேற்கத்தக்கது.
சிறுபான்மையினரின் அவ நம்பிக்கையை அகற்றும் நடவடிக்கைகளிலும் நலிவுற்ற மக்களின் வாழ்க்கைத் தரம் உயருவதற்கான செயல் முறைகளிலும் மோடியின் அரசு முனைப்புடன் ஈடுபடுவதன் மூலம் நாட்டைச் சீரழிக்கும் ஜாதிய, மதவாத சக்திகளிடம் இருந்து மக்களை விடுவித்து, வளர்ச்சி பாதையில் வலம் வருவதற்கு வழி வகுக்கும்.
தமிழகத்தில் 2 முக்கிய நோக்கங்களுக்காக தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைக்கப்பட்டது. காங்கிரசை வீழ்த்தவும், திராவிடக் கட்சிகளின் பிடியிலிருந்து தமிழகத்தை விடுவிக்கவும் உருவாக்கப்பட்ட இந்த கூட்டணியின் நோக்கங்கள் ஓரளவு நிறைவேறியுள்ளன. காங்கிரஸ் அனைத்து தொகுதிகளிலும் மோசமான தோல்வியைத் தழுவி மீண்டும் எழ முடியாமல் விழுந்துவிட்டது.
திமுக ஒரு தொகுதியில்கூட வெற்றியைப் பெற முடியாமல் மக்கள் பிரதிநிதித்துவத்தை முற்றாக இழந்துவிட்டது. இந்தச் சூழலைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி, சட்டசபை தேர்தலுக்கான வியூகம் வகுப்பதில் ஈடுபட வேண்டும்.
தமிழகத்தில் 75 லட்சம் வாக்காளர்கள் இந்தக் கூட்டணிக்கு வாக்களித்ததன் மூலம் மாற்று அரசியல் மலர தங்கள் ஆதரவை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளனர்.
விஜயகாந்தின் ஆரம்ப கால அரசியல் ஊசலாட்டங்களும், ராமதாசின் பிடிவாதமான புறக்கணிப்பும், மாதக் கணக்கில் தொகுதி உடன்பாடு காண்பதில் கடைப்பிடித்த கேலிக்கூத்துகளும், கூட்டணி தலைவர்கள் ஒருங்கிணைந்து ஒரு மேடையில் கூட வாக்காளர்களைச் சந்திக்காமல் தவிர்த்ததும் மோடியை மையமாகக் கொண்டு மக்களிடம் மலர்ந்த எதிர்பார்ப்பை முறியடித்து விட்டன.
இந்த கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெற முடியாமல் போனதற்கு விஜயகாந்த், ராமதாஸ் இருவரின் அணுகுமுறையே அடிப்படைக் காரணம். இதில் வாக்காளர்களைக் குறை சொல்வதற்கு ஒன்றுமில்லை. தவறுகளில் இருந்து பாடம் பெறுவதுதான் அரசியல் பண்புடைமை. ஆனால் ராமதாசும், விஜயகாந்தும் சட்டப்பேரவை தேர்தலை நோக்கி சேர்ந்து களத்தில் நிற்பார்கள் என்பது சந்தேகத்துக்குரியது. பாஜக கூட்டணி இந்த இருவர் மூலம் வலுப்பெறுவதற்கு வாய்ப்பு இல்லை.
மாற்று அரசியல் மலர்வதற்கு தன்னை முற்றாக அர்ப்பணித்துக் கொண்ட வைகோவின் தோல்வியை தமிழினத்தின் ஒட்டு மொத்த தோல்வியாகக் கருதுகிறோம். 2 ஆண்டுகளுக்குள் வர உள்ள சட்டசபை தேர்தலில் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தற்போதுள்ள சாதகமான சூழல் இருப்பதற்கு வாய்ப்பு இல்லை. மாற்று அரசியல் வளர்த்தெடுப்பதற்கு ஏற்ற வியூகத்தை இனி காலம்தான் காட்ட வேண்டும்.
இவ்வாறு தமிழருவி மணியன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.