வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Bala
Last Modified: வெள்ளி, 11 டிசம்பர் 2015 (12:29 IST)

விஜயகாந்த் உடல் நலம் குறித்த வதந்தி: தேமுதிக தலைமை கழகம் விளக்கம்

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று செய்திகள் பரவின. இது அவரது கட்சித் தொண்டர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இ ந் நிலையில் இது தவறான செய்தி என்று அக்கட்சியின் தலைமை கழகம் தெரிவித்துள்ளது. இது குறித்து கட்சியின சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-


 

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என்ற தவறான செய்தி காட்டுத்தீ போல் பரவி வருகிறது. அதுகுறித்த உண்மை நிலையை அனைத்து தரப்பினரும் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக, தலைமை கழகத்தின் சார்பில் இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர், சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை தனது முதல்கட்ட சுற்றுப்பயணத்தின் மூலமும், இரண்டாம் கட்ட சுற்றுப்பயணமாக சென்னை, தூத்துக்குடி, கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கும், மீண்டும் நேரில் சென்று பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு, மக்களுக்கு பல்வேறு நிவாரண உதவிகளை செய்து, ஆறுதலும் கூறிவந்தார்.

கடலூரில் மழை ஆரம்பித்த நாளிலிருந்து, நேற்று வரை சுமார் ஒரு மாத காலமாக, ஒருநாள் கூட ஓய்வெடுக்காமல், மழையால் சாலைகள் மிக மோசமாக இருந்த நிலையிலும், சாலை வழியாகவே அனைத்து மாவட்டங்களுக்கும் கார் மூலம் சென்று வந்தார். சென்ற இடமெல்லாம் குப்பை கூளங்களும், சேறும் சகதியும், மழை நீரும் கழிவு நீரும் தேங்கி, சுகாதார மற்ற நிலையில் இருந்த பல இடங்களுக்கு, காலுறையும், கையுறையும் இல்லாமல், மக்களுடன் மக்களாக இரண்டறக் கலந்து அனைத்து இடங்களையும் பார்வையிட்டார்.பாதிக்கப்பட்ட மக்களிடம் பேசி தேவையான நிவாரண உதவிகளையும் வழங்கினார். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மாவட்டத்திலும், குறைந்த பட்சம் பதினைந்து முதல் இருபது இடங்களை பார்வையிட்டு வந்தார். இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு, கடலூர் மாவட்டத்திற்கு வருகை தரும்போது, ஓய்வின்றி தொடர்ந்து சாலை வழியாக செய்த பயணமும், அதனால் ஏற்பட்ட அலைச்சலாலும், கடுமையான காய்ச்சல் ஏற்பட்டு மிகவும் அவதிப்பட்டார். அதன் விளைவாக கடலூர் செல்ல முடியாமல் அன்று இரவு பெரம்பலூரிலேயே தங்கினார்.

அவருடன் இருந்த தலைமை கழக நிர்வாகிகளும், மாவட்ட கழக செயலாளர்களும் இவ்வளவு கடுமையான காய்ச்சலுக்கு இடையே, கடலூர் மாவட்ட சுற்று பயணத்தை ரத்து செய்து விடலாம் என ஆலோசனை வழங்கியபோதும், அதை ஏற்க மறுத்து கடலூர் மாவட்டத்திற்கு வருகிறேன் என அறிவித்து விட்டேன், அந்த மாவட்ட மக்கள் என்னை எதிர்பார்த்து இருப்பார்கள், எனக்கு மக்கள்தான் முக்கியம், எனது உடல்நிலையைப் பற்றி கவலை இல்லை என்று சொல்லி, தானாகவே ஒருசில மாத்திரைகளை உட்கொண்டு, திட்டமிட்டபடி கடலூருக்கு சென்று வந்தார்.மேலும் நேற்றும், இன்றும் தலைமை கழகத்திற்கு பல மாவட்டங்களிலிருந்து வந்த நிவாரண பொருட்களை, தன் நேரடி கண்காணிப்பில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைத்தார்.

சென்னையில் இருக்கின்ற நாட்களில் காலை 10.30 மணி முதல் மதியம் 2.00 மணி வரை, தலைமை கழகத்தில் அமர்ந்து கட்சியின் அனைத்து பணிகளையும் தனது நேரடி பார்வையில் செய்துகொண்டிருப்பார். மக்கள் பணியே, மகேசன் பணி என்று, எந்த நேரமும் மக்கள்... மக்கள்... மக்கள்... என சிந்தித்து, “ஏழையின் சிரிப்பில் இறைவனைக்காணும்” கழகத் தலைவர் கேப்டனுக்கு ஆண்டவன் அருளாலும், பெரியவர்களின் ஆசியாலும், நல்லவர்களின் துணையாலும், அவரது உடல் நிலையில் எந்தவித பாதிப்புமின்றி, நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ளார் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.