1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: திங்கள், 20 ஜூன் 2016 (14:40 IST)

கொந்தளித்த விஜயகாந்த்: நீங்க கிளம்புங்க, நான் பார்த்துக்கிறேன்!

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தேமுதிக படுதோல்வியடைந்ததை அடுத்து வருகிற உள்ளாட்சி தேர்தலில் தங்கள் பலத்தை நிரூபிக்க தேமுதிக தலைவர் விஜயகாந்த் தீவிர முயற்சி எடுத்து வருகிறார்.


 
 
இந்நிலையில் தேர்தல் தோல்வி குறித்து ஆலோசித்து வரும் விஜயகாந்த் மதுரை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டம் வாரியாக, நகரம், பேரூர், ஒன்றிய செயலாளர்கள் போன்ற நிர்வாகிகளுடன் கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார்.
 
இந்த ஆலோசனை கூட்டத்தில், மதுரை மாவட்ட நிர்வாகி ஒருவர் பேசிய பேச்சு விஜயகாந்தை கோபமூட்டியது. இதனால் கொந்தளித்த விஜயகாந்த் கட்சியினரிடையே கோபத்தை காட்டினார்.
 
எல்லாவற்றிற்கும் எங்களை அழைத்து ஆலோசனை நடத்தும் நீங்கள் குடும்ப உறுப்பினர்கள் பேச்சைக் கேட்டு, கூட்டணி முடிவை எடுக்கிறீர்கள் என அந்த நிர்வாகி பேசினார்.
 
இதனால் கோபமடைந்த விஜயகாந்த் இங்கு வந்திருக்கும் பலரும் திமுகவில் சேர முடிவு செய்துள்ளது எனக்கு தெரியும். அதை மனதில் வைத்தே, இப்படி குற்றச்சாட்டை கூறுகிறீர்கள்.
 
கட்சியை வளர்ப்பது எப்படி என்பது எனக்கு தெரியும், நீங்கள் கிளம்புங்கள் என ஆவேசமாக கூறிய விஜயகாந்த் அங்கிருந்து கிளம்பி வீட்டுக்கு சென்றுவிட்டார்.