1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : புதன், 5 அக்டோபர் 2016 (15:55 IST)

ஜெ.வை சந்திக்க சென்ற வேல்முருகன்; சொல்லி அனுப்பிய அதிமுக அமைச்சர்கள்

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை இன்று காலை சந்திக்க தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் பண்ருட்டி வேல்முருகன் சென்றுள்ளார்.
 

 
கடந்த 10 நாட்களாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை தமிழக அமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் ஆகியோர் சந்திக்க முயற்சித்து வருகின்றனர்.
 
ஆனால், யாரையும் மருத்துவமனை நிர்வாகம் சந்திக்க அனுமதிக்கவில்லை. இதற்கிடையில் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் மட்டும் முதலமைச்சர் அனுமதிக்கப்பட்டு இருந்த வார்டுக்கு சென்றதாகவும், ஜெயலலிதா நலமுடன் இருப்பதாகவும் கூறினார்.
 
இந்நிலையில், அப்பல்லோ சென்று வந்த வேல்முருகன் முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்திக்கவில்லை என்றும் மாறாக அதிமுக அமைச்சர்களை மட்டும் சந்தித்துவிட்டு திரும்பியதாகவும் கூறியுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”முதல்வரின் உடல்நிலையை அறிய வந்தேன். அவர் சிகிச்சை பெற்று வரும் தளத்தில் அதிமுக அமைச்சர்களை சந்தித்தேன். முதல்வரை நான் சந்திக்கவில்லை. அவர்கள் முதல்வர் உடல் நலம் தேறி வருவதாக தெரிவித்தனர்.
 
விரைவில் குணமடைய தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்தேன். உலகம் முழுவதும் உள்ள புலம்பெயர்ந்த தமிழர்கள் மற்றும் இலங்கையில் உள்ள மாநில முதல் அமைச்சர் விக்னேஷ்வரன் ஆகியோர் முதல்வரின் உடல் நலம் குறித்து விசாரித்தனர். அதையும் நான் அதிமுக அமைச்சர்களிடம் பகிர்ந்து கொண்டேன்” என்றார்.