டோல்கேட் கட்டணம் வசூலித்தால் போராட்டம்: வேல்முருகன் ஆவேசம்
கொரோனா வைரசால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் இன்று முதல் டோல்கேட் கட்டணம் வசூலிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதனையடுத்து இன்று அதிகாலை 12 மணி முதலே அனைத்து டோல்கேட்டுகளிலும் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது
இந்த நிலையில் கொரோனா நெருக்கடி தீரும்வரை டோல்கேட்டுகளில் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் மீறி வசூலித்தால் போராட்டம் நடத்தவும் தயங்க மாட்டேன் என்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் அவர்கள் எச்சரித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
டோல்கேட் கட்டணம் வசூலிக்க எடுத்த முடிவை உடனடியாக மத்திய அரசு கைவிட வேண்டும் என எச்சரித்துள்ள வேல்முருகன், ’மோடி அரசு கார்ப்பரேட்டுகளின் அரசாக இருப்பதால் உழைக்கும் மக்கள் இந்த அரசுக்கு ஒரு பொருட்டாக இல்லை என்றும் மோடி ஆட்சிக்கு வந்ததிலிருந்து அடுத்தடுத்து எடுத்த நடவடிக்கைகளே இதற்கு சாட்சி என்றும் வேல்முருகன் கூறியுள்ளார்
இந்த கொரோனா காலத்திலும் கட்டணங்கள் வசூல் செய்வதிலேயே குறியாக இருக்கும் மோடி அரசுக்கு தனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறியிருக்கிறார்