1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 1 ஆகஸ்ட் 2024 (16:34 IST)

கட்டைப்பையில் வைத்து குழந்தையை கடத்திய பெண்! வேலூரில் அதிர்ச்சி சம்பவம்..!

வேலூரில் பச்சிளம் குழந்தையை கட்டைப்பையில்  வைத்து பெண் ஒருவர் கடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் அரசு மருத்துவமனையில் பிறந்து இரண்டு நாட்கள் மட்டுமே ஆன குழந்தையை பெண் ஒருவர் கடத்தி சென்றதாக காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. இதை அடுத்து காவல்துறையினர் இது குறித்து விசாரணை செய்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பார்ப்பது போல் வந்த பெண் ஒருவர் குழந்தையை கட்டைப்பையில் வைத்து கடத்திச் சென்றது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரிய வந்துள்ளது. கட்டைப்பையில் குழந்தையை எடுத்துச் செல்லும் பெண்ணுடன் ஒரு சிறுவனும் சென்றது சிசிடிவி காட்சி மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வேலூர் அரசு மருத்துவமனையில் கோவிந்தன் - சின்னி தம்பதிக்கு கடந்த 27ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் குழந்தைகள் வார்டில் சின்னி குழந்தையுடன் இருக்கும் நிலையில் அவரது கணவர் உணவு வாங்கி வருவதற்காக வெளியே சென்று இருந்தார்.

அப்போது சின்னி சாப்பிட்டுக் கொண்டிருந்த போது குழந்தை அழுததாக சொல்லப்படுகிறது. அந்த நிலையில் நீங்கள் சாப்பிடுங்கள், நான் குழந்தையை பார்த்துக்கொள்கிறேன் என்று பெண் ஒருவர் வந்த நிலையில் திடீரென அவர் குழந்தையுடன் மாயமானார்.

அதன் பிறகு சிசிடிவி காட்சிகளை பார்த்தபோது தான் அந்த பெண், குழந்தையை கட்டைப்பையில் வைத்து கடந்து சென்றது தெரிய வந்தது. இதனை அடுத்து அந்த பெண்ணை பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Edited by Mahendran