1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : சனி, 9 ஜனவரி 2016 (15:40 IST)

மாடு விடுதலை பெற்றது; ஏறு தழுவுதல் மட்டுமே மிச்சம் - வைரமுத்து

நீண்ட நாட்களுக்கு நீடித்துவந்த ஜல்லிக்கட்டு தொடர்பான சர்ச்சை நேற்று முடிவிற்கு வந்தது. நேற்று தமிழகத்தில் மீண்டும் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அனுமதி அளித்து அறிவிக்கை வெளியிட்டது. இந்த அறிவிப்பு, இந்த ஆண்டு பொங்கல் மற்றும் ஜல்லிக்கட்டு விழாக்கள் தொடர்பாக மக்கள் மனதில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 
ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்ததற்கு, முதலமைச்சர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், வைகோ, ஜி.கே.வாசன், மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் நன்றி தெரிவித்திருந்தனர்.
 
இந்நிலையில், கவிஞர் வைரமுத்து அவர்களும் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில், “தமிழர்களின் வீர அடையாளங்களுள் ஒன்று மீட்கப்பட்டிருக்கிறது.
 
வேளாண்மைக் கலாசாரத்திலிருந்து மாடு விடுதலை பெற்று விட்டது. ஏறு தழுவுதல் மட்டுமே அதில் மிச்சமாக இருக்கிறது. அந்த உரிமை மீட்டெடுக்கப்பட்டது மகிழ்ச்சி தருகிறது. அந்த உரிமைக்காகப் போராடியவர்களுக்கும் மீட்டுத் தந்த பெருமக்களுக்கும் மகிழ்ச்சியோடு நன்றி சொல்கிறேன். 
 
இது நிரந்தரமான உரிமையாக வேண்டுமென்றால் முறைப்படியான சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும். தமிழர்களின் உரிமைக்குக் குரல் கொடுத்த மத்திய அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் அவர்களையும் அனுமதி அளித்த பாரதப் பிரதமர் மோடி அவர்களையும் தமிழ் இன உணர்வாளர்கள் பாராட்டுகிறார்கள்” என்று கூறியுள்ளார்.