விவசாயிகளை வீட்டை விட்டு துரத்துவது தான் வெற்றி நடை போடும் தமிழகமா? உதயநிதி
மதுரையை சேர்ந்த விவசாயி ஒருவர் தனியார் வங்கியில் கடன் வாங்கி இருந்த நிலையில் கடனை திருப்பிச் செலுத்தாததால் அவரையும் அவரது வீட்டில் உள்ளவர்களையும் வீட்டை விட்டு வெளியேற்றி கதவை பூட்டி சீல் வைத்த வங்கி அதிகாரியின் செயலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
இந்த செய்தி இன்று காலை முதல் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சற்று முன்னர் இது குறித்து உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டரில் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த டுவீட்டில் அவர் கூறியிருப்பதாவது
மதுரையைச் சேர்ந்த விவசாயி சதீஷ்குமார் தனியார் வங்கியில் வாங்கியக்கடனை திருப்பிச் செலுத்தாததால் அவருடைய வீட்டிற்கு காவல்துறை உதவியோடு சீல் வைக்கப்பட்டுள்ளது. மாற்றுத்துணி கூட இல்லாமல் 2 மகள்கள், மனைவியுடன் சதீஷின் குடும்பமே ஒரு வாரமாக தெருவோரம் வசிக்கும் கொடுமை வலியை தருகிறது
கொரோனாவால் விவசாயிகள் பலர் வங்கிக்கடனை செலுத்த முடியாத நிலையில், வங்கிகள் கடுமை காட்டுவதை தடுக்க அடிமை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விவசாயிகளை வீட்டை விட்டு துரத்துவது தான் பச்சைத்துண்டு பழனிச்சாமி சொல்லும் வெற்றி நடை போடும் தமிழகமா?