1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : திங்கள், 23 ஜனவரி 2017 (13:31 IST)

அமைச்சர் விஜயபாஸ்கரின் அவசரத்தால் ஜல்லிக்கட்டு போட்டியில் இருவர் பலி!

சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் புதுக்கோட்டை மாவட்டம் ராப்பூசலில் அவசர கதியில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தியதில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


 

தமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு உரிய சட்டம் இயற்றாமலும் காட்சிப்படுத்தக்கூடாத பட்டியலில் இருந்து காளையை நீக்காமலும் தொடர்ந்து மோடி தலைமையிலான மத்திய அரசு தமிழக மக்களுக்கு துரோகம் இழைத்து வருகிறது.

இதனால் பொறுமையிழந்த லட்சக்கணக்கான மாணவர்களும், இளைஞர்களும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்தக் கோரி தமிழகத்தின் பல்வேறு தரப்பிலும் போராட்டம் நடத்தினர்.

போராட்டம் உக்கிரமடைந்ததைத் தொடர்ந்து இரண்டு தினங்களுக்கு முன்பு தில்லியில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். மோடியோ நீதிமன்றத்தைக் காரணம் காட்டி தன்னால் எதுவும் செய்ய இயலாது எனக் கைவிரித்தார்.

இதனைத் தொடர்ந்து தமிழக அரசு சார்பில் ஒரு அவசரச் சட்டம் இயற்றப்பட்டு ஞாயிற்றுக்கிழமையன்று ஜல்லிக்கட்டு நடைபெறும் எனவும், அலங்கா நல்லூரில் தானே தொடங்கி வைப்பேன் எனவும் முதல்வர் அறிவித்தார்.

ஆனால், உரிய பாதுகாப்புடன் மத்திய அரசு சட்டம் இயற்றினால் மட்டுமே கைவிடுவோம் என அறிவித்து தொடர்ந்து இளைஞர்களும் மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அலங்காநல்லூருக்கு ஞாயிறன்று ஜல்லிக்கட்டு நடத்தச் சென்ற முதல்வர் போராட்டக்காரர்களின் பலத்த எதிர்ப்பின் காரணமாக நடத்த முடியாமல் திரும்பிவிட்டார்.


 

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்திலும் பலத்த எதிர்ப்பு இருப்பதை உணர்ந்துகொண்ட மாவட்ட நிர்வாகம் அமைச்சர் விஜயபாஸ்கரின் சொந்த கிராமமான ராப்பூசலில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்தது. எத்தகைய எதிர்ப்பு வந்தாலும் தனது சொந்த கிராமத்தில் சமாளித்துவிடலாம் என்பதுதான் அமைச்சரின் கணிப்பு.

ராப்பூசலில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏற்ற சூழ்நிலையை மாவட்ட நிர்வாகம் உருவாக்கவில்லை. பார்வையாளர்களுக்கும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. இதனால், ஜல்லிக்கட்டை பார்க்கச் சென்ற முடுக்கூரைச் சேர்ந்த ராஜா (31), லெட்சுமணப்பட்டியைச் சேர்ந்த சந்திரமோகன் (27) ஆகிய இருவரை காளைகள் முட்டியதில் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டனர்.

தனது மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்தியதாக கணக்குக்காட்ட வேண்டுமென்பதற்காக அமைச்சர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் தவறான நடவடிக்கையால் அப்பாவிகளின் இரண்டு உயிர்கள் பலியான சம்பவம் மிகவும் வேதனை அளிப்பதாக உள்ளது.

இத்தகைய அலட்சியமான நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளது.