நாங்கள் ஆட்சியை கலைக்க மாட்டோம் - மேலூர் கூட்டத்தில் தினகரன்
தற்போது செயல்பட்டு வரும் ஆட்சியை கலைக்க மாட்டேன் என இன்று மேலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேசியுள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், சமீபத்தில் நடந்த கூட்டத்தில், துணைப் பொதுச்செயலாளராக தினகரனை நியமித்தது செல்லாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுநாள் வரை அமைதியாக இருந்த தினகரனுக்கு இந்த விவகாரம் கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியிருப்பதாக தெரிகிறது. இந்நிலையில்தான் இன்று மாலை மேலூரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பல்லாயிரம் பேர் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் தினகரன பேசியதாவது:
இந்த ஆட்சி நமது ஆட்சி எனவே ஆட்சி கலைப்பதில் நான் ஈடுபட மாட்டேன். அறைக்குள் அமர்ந்து அவர் வேண்டாம் இவர் வேண்டாம் என தீர்மானம் போடலாம்..தீர்மானம் போட்டவர்கள் வெளியே வந்து பார்க்க வேண்டும்... நான் 1987ம் ஆண்டிலிருந்து கட்சியில் இருந்து வருகிறேன்.. இப்போது இருக்கிற எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் யாரால் அடையாளம் காணப்பட்டார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த இரண்டு எம்.எல்.ஏக்களை கடத்தி கொண்டு போய்விட்டனர். இது அவர்களுக்கு அழகு அல்ல.. கூவத்தூரில் நாங்கள் 3 நாட்கள் படாத பாடு பட்டதால்தான் தற்போது இந்த ஆட்சி நடைபெற்று வருகிறது. சின்னம்மா சசிகலா நினைத்திருந்தால் எங்கள் குடும்பத்தில் ஒருவரையே முதல்வராக நியமித்திருக்க முடியும்..ஆனால், அப்படி செய்யவில்லை. ஏனெனில் பதவிக்காக ஆசைப்படுகிறவர்கள் நாங்கள் அல்ல.
இப்போது ஆட்சியில் உள்ளவர்கள், தொண்டர்களின் உணர்வுகளை புரிந்து ஆட்சி செய்ய வேண்டும். யாரோ கொடுக்கும் நெருக்கடிக்கு பயந்து செயல்பட்டால், அதிமுக தொண்டர்கள் உங்களை மன்னிக்க மாட்டார்கள்..தொண்டர்களின் ஆதரவு இருந்தால்தான் எதுவும் செய்ய முடியும்.
இன்று கூடியுள்ள இந்த கூட்டம்தான் 2019ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை வெல்லும் கூட்டம். ஆகவே ஆட்சி பொறுப்பில் இருக்கும் மமதையில் மக்களை மறந்து விடாதீர்கள்.
இது நமது ஆட்சி. எனவே, இதைக் கலைக்க நான் முயற்சி செய்ய மாட்டேன்.” என அவர் பேசினார். மேலும், அமைதியின் அடையாளமான புறா ஒன்றையும் அவர் பறக்கவிட்டார்.
தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில், எடப்பாடி அணிக்கு எதிராக பல அதிரடி நடவடிக்கைகளையோ அல்லது அறிவிப்புகளையோ தினகரன் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி எதையும் அவர் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.