1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 2 டிசம்பர் 2021 (14:32 IST)

தடுப்பூசி போடாவிட்டால் சம்பளம் கட் - சர்வாதிகாரபோக்கு என டிடிவி விமர்சனம்!

மின்வாரியத்தின் அறிவிப்பிற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது சமூக வலைத்தள பக்கமான டிவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். 

 
தடுப்பூசி போடாத ஊழியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு டிசம்பர் மாத சம்பளம் வழங்கப்படாது என மதுரை மண்டலம் மின்வாரிய தலைமை பொறியாளர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது,

மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட அனைத்து மின் பகிர்மான வட்டங்களில் பணிபுரியும் அனைத்து பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் தடுப்பு மருந்து முதல் மற்றும் இரண்டாம் தவணை எதிர்வரும் டிசம்பர் 7ஆம் தேதிக்குள் செலுத்திக் கொள்ள அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
 
அவ்வாறு தடுப்பு மருந்து செலுத்தி கொள்ளாத பணியாளர்கள் மற்றும் அலுவலர்களின் டிசம்பர் மாத ஊதியம் நிறுத்தம் செய்யப்படும். மருத்துவ காரணங்களுக்காக தடுப்பூசி செலுத்தாத அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உரிய மருத்துவச் சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க அறிவுறுத்த அனைத்து மேற்பார்வை பொறியாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என கூறப்பட்டது. 
இந்நிலையில் இதற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது சமூக வலைத்தள பக்கமான டிவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது, கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மதுரை மண்டல ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்பட மாட்டாது என்ற அறிவிப்பு கண்டிக்கத்தக்கது. 
 
மழை, வெள்ளம் உள்ளிட்ட பேரிடர் காலங்களில் தங்களுடைய உயிரைப் பணயம் வைத்து முன்களப் பணியாளர்களாக செயல்படும் மின்வாரிய ஊழியர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகளை செய்து தடுப்பூசி செலுத்துவதுதான் ஒரு நல்ல அரசு நிர்வாகத்தின் பணியாக இருக்க முடியும்.  
 
அதை விட்டுவிட்டு ஊசி போட்டுக்கொள்ளாவிட்டால் ஊதியம் வழங்க முடியாது என்பது சர்வாதிகாரபோக்காகும். இந்தத் தவறை மின்வாரிய நிர்வாகம் உடனடியாக சரிசெய்து கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.