ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 2 டிசம்பர் 2021 (12:55 IST)

கஞ்சாவையும் சட்டரீதியாக விற்பீர்களா? – அரசுக்கு மதுரை கிளை நீதிமன்றம் கேள்வி!

மதுரை கல்யாணிப்பட்டியில் மதுக்கடை திறந்தது குறித்த வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகத்தில் பல பகுதிகளில் அரசின் டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வரும் நிலையில் மதுவால் மக்கள் பாதிக்கப்படுவதால் மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற குரல்களும் ஒலித்து வருகின்றன. இந்நிலையில் மதுரை கல்யாணிப்பட்டியில் புதிதாக மதுக்கடை திறக்கப்பட்டதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அதில் அரசு சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், அப்பகுதியில் போலி மதுபானங்கள் விற்பனை அதிகரித்து வருவதாகவும், அதை கட்டுப்படுத்தவே மதுக்கடை திறக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து கேள்வி எழுப்பிய நீதிபதிகள் “போலி மதுபானங்களை ஒழிக்க மதுக்கடைகள் திறக்கலாம் என்றால், சட்டத்திற்கு புறம்பாக கஞ்சா விற்பதை தடுக்க சட்டரீதியாக கஞ்சா விற்க முடியுமா? மதுவிலக்கை அமல்படுத்தினாலும் மதுவிரும்பிகள் அண்டை மாநிலங்களுக்கு சென்று மது அருந்துவார்கள். நாடு முழுவதும் தடை செய்தாலும் அடுத்த நாட்டிற்கு செல்லும் நிலைமையில் உள்ளனர்” என்று கூறியுள்ளனர்.