’சிறைக்குள் என்னை கொல்ல முயற்சி’ - அட்டாக் பாண்டி பரபரப்பு கடிதம்
சிறைக்குள் சாதி கலவரத்தை தூண்டியோ அல்லது பிற ஏதேனும் காரணங்களின் பேரிலோ என்னை கொல்ல சில போலீஸ் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர் என்று அட்டாக் பாண்டி கடிதம் அனுப்பி உள்ளார்.
மதுரை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் போன்ற 20க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடையவர் அட்டாக் பாண்டி.
மேலும், கடந்த 2013ஆம் ஆண்டு, திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் ஆதரவாளரும், திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினருமான பொட்டு சுரேஷ் கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் அட்டாக் பாண்டி காவல் துறையினரால் தேடிப்பட்டு வந்தார். ஆனால் இரண்டு வருடங்களுக்கு மேல் தண்ணி காட்டிய அட்டாக் பாண்டியை மும்பையில் காவல் துறையினர் கைது செய்தனர். பின்பு அட்டாக் பாண்டி குண்டர் சட்டத்தின்கீழ் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் அட்டாக் பாண்டி நெல்லை சிறையில் தனக்கு பாதுகாப்பு இல்லை என்றும் போலீஸ் அதிகாரிகள் என்னை கொல்ல சதி செய்கிறார்கள் என்றும் மதுரை 6-வது குற்றவியல் நீதிமன்றம் மற்றும் அருப்புக்கோட்டை நீதிமன்றத்துக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார்.
அந்த கடிதத்தில், ‘’நெல்லை சிறைக்குள் சாதி கலவரத்தை தூண்டியோ அல்லது பிற ஏதேனும் காரணங்களின் பேரிலோ என்னை கொல்ல சில போலீஸ் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதனை சிறையில் உள்ள உளவுத்துறை அதிகாரிகள் மூலம் அறிந்து கொண்டேன்.
இதுகுறித்து கடந்த மார்ச் மாதம் 14ஆம் தேதி சிறைத்துறை தலைவருக்கு மனு கொடுத்தும் இதுவரை எனக்கு எந்த பாதுகாப்பு ஏற்பாடும் செய்யவில்லை. சிறைக்கு வெளியே சிறப்பு போலீஸ் படையை சேர்ந்த துப்பாக்கி ஏந்திய போலீசாரை என் பாதுகாப்புக்கு நியமிக்க வேண்டும்.
மேலும் இந்த கடிதம் தங்கள் கைகளில் (நீதிமன்ற நடுவர்) கிடைக்க பெற்று நடவடிக்கை எடுக்கும் முன்பு எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
நான் கொல்லப்பட்டால் என் உடலை தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளை தவிர்த்து கேரளா அல்லது டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். சிறையில் தற்போது நிலவும் சூழ்நிலைகளை பார்க்கும்போது உளவுத்துறை அதிகாரிகள் கூறிய தகவல்கள் வலுப்பெற்று வருகிறது’’ என்று தெரிவித்துள்ளார்.
அட்டாக் பாண்டியின் இந்த பரபரப்பு குற்றச்சாட்டுகள் குறித்து உரிய விளக்கம் வேண்டும் என்று நெல்லை சிறைத்துறை நிர்வாகத்துக்கு குற்றவியல் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.