சசிகலாவின் கணவர் நடராஜனுக்காக, திருச்சியில் விபத்தில் சிக்கி, மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல், விதிமுறைகளை மீறி அபகரிக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
கிட்னி மற்றும் கல்லீரல் பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடராஜனுக்கு, இன்று காலை உறுப்பு மாற்று சிகிச்சை செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.
திருச்சியில் மூளைச்சாவு அடைந்த கார்த்தி என்பவரின் உடல் நேற்று காலை விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டதாகவும், கார்த்தியின் கிட்னி மற்றும் கல்லீரலை, பெரும்பாக்கம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடராஜனுக்கு பொருத்தபட்டதாகவும் தெரிகிறது.
இந்நிலையில், கார்த்திக் உடலை விதிமுறைகளை மீறி, நடராஜனின் உறவினர்கள் விமானம் மூலம் சென்னை கொண்டு வந்துள்ளனர் என செய்திகள் வெளியானது.
செப்.30ம் தேதி மோட்டார் சைக்கிளில் கார்த்திக் சென்ற போது, கார் மோதி படுகாயம் அடைந்து, தஞ்சை மருத்துவக்கல்லூரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அப்போது, மூளை நரம்பு வெடித்து அவர் மூளைச்சாவு அடைந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த வேளையில், நேற்று இரவு 9.40 மணிக்கு மருத்துவர்கள் மற்றும் கார்த்திக்கும் குடும்பத்தினரை மீறி நடராஜன் தரப்பினர், கார்த்திக்கின் உடலை ஏர் ஆம்புலன்ஸ் மூலம் சென்னை கொண்டு வந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
இந்த விவகாரத்தில் தமிழக அமைச்சர் மற்றும் பிரபல மருத்துவர் ஒருவரும் தொடக்கம் முதலே ஆர்வம் காட்டி வந்ததாகவும், அவர்கள் தூண்டுதலின் படியே கார்த்திக்கின் உடல் வலுக்கட்டாயமாக சென்னை கொண்டு வரப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
பொதுவாக, உறுப்பு மாற்றம் செய்ய விரும்புபவர் மற்றும் பாதிக்கப்பட்டோர் ‘தமிழ்நாடு ஆர்கன் ரிஜிஸ்டரி நெட்வொர்க்’ என்ற அமைப்பில் பதிவு செய்திருக்க வேண்டும். அதன் பின் சீனியாரிட்டி அடிப்படையில்தான் ஒருவரின் உடல் உறுப்புகள், பாதிக்கப்பட்டவருக்கு அளிக்கப்படும்.
நடராஜன் விவகாரத்தில் இந்த விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை எனக் கூறப்படுகிறது. அதை விட முக்கியமாக, இறந்தவரின் உடல் உறுப்புகளை மட்டுமே எடுத்து செல்லப்படும். ஆனால், கார்த்திக்கின் உடல் முழுமையாக அப்படியே சென்னை கொண்டு வரப்பட்டுள்ளது மருத்துவர்கள் உட்பட பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.