1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: புதன், 18 மே 2016 (10:27 IST)

ரூ.570 கோடி விவகாரம்; தேர்தல் முடிவுக்கு தடை விதிக்க வேண்டும் : டிராபிக் ராமசாமி வழக்கு

கண்டெய்னரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.570 கோடி பற்றிய உண்மை நிலை தெரியும் வரை தேர்தல் முடிவுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.


 

 
இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
 
கடந்த 14ஆம் தேதி திருப்பூர் மாவட்டத்தில் வாகன சோதனையில் பிடிபட்ட ரூ.570 கோடிக்கு, முறையான ஆவணங்கள் தாக்கல் செய்யப்படவில்லை. திடீரெனெ தற்போது அந்த பணம் தங்களுடையது என்று பாரத ஸ்டேட் வங்கி நிர்வாகம் கூறியுள்ளது.
 
ஆனால், வங்கி சார்பில் அளிக்கப்படும் விளக்கம், தேர்தல் அதிகாரிகளுக்கு திருப்தி அளிக்காமல் உள்ளது. ஒரு பெரும் தொகையை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லும்போது, என்னென்ன விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி ஏற்கனவே அறிவித்துள்ளது.
 
ஆனால், அவை எதுவும் பின்பற்றப்படவில்லை. எனவே இது சட்ட விரோதமான பணம் என்பது தெளிவாக தெரிகிறது. இதுவரை ரிசர்வ் வங்கி மண்டல இயக்குனர் மற்றும் அமலாக்கப்பிரிவு மண்டல சிறப்பு இயக்குனர் ஆகியோர் இந்த பணம் குறித்து முறையான விசாரணை நடத்தி, தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு அறிக்கை தரவில்லை.
 
எனவே, அந்த பணம் குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும். அதன் முடிவு தெரியும் வரை தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளை வெளியிடக்கூடாது என்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கும் உத்தரவிடவேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகவுள்ள நிலையில், டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்துள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.