திப்பு சுல்தான் பிறந்தநாள் கொண்டாட போலீஸ் தடை?


K.N.Vadivel| Last Updated: சனி, 21 நவம்பர் 2015 (03:59 IST)
திப்பு சுல்தான் பிறந்தநாள் கொண்டாட அனுமதி அளித்தால், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர்.
 
 
கர்நாடகாவில் திப்புசுல்தான் பிறந்தநாள் விழா கொண்டாடம் நடைபெற்ற போது, கலவரம் ஏற்பட்டு, விஸ்வ இந்து பரிஷத் நிர்வாகி ஒருவர் படுகொலை செய்யப்பட்டார்.
 
இந்த நிலையில், வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில், திப்பு சுல்தான் பிறந்த நாள் விழா கொண்டாட அனுமதி அளிக்க வேண்டும் என தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் அதன் துணை பொதுச் செயலாளர் இஸ்மாயில், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
 
இந்த வழக்கு, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, குடியாத்தம் காவல் நிலைய ஆய்வாளர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், திப்பு சுல்தான் பிறந்தநாள் கொண்டாட அனுமதி அளித்தால், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என தெரிவித்து இருந்தனர்.
 
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி இந்த வழக்கை திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். இதனால், தமிழகத்தில் திப்பு சுல்தான் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது. 
 


இதில் மேலும் படிக்கவும் :