1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : செவ்வாய், 3 பிப்ரவரி 2015 (10:37 IST)

நகைக்கு ஆசைபட்டு தோழியை கிணற்றில் தள்ளி கொலை செய்த மாணவி: பரபரப்பு வாக்குமூலம்

திண்டிவனம் அருகே, நகைக்கு ஆசைபட்டு தோழியை கிணற்றில் தள்ளி கொலை செய்த மாணவியை காவல்துறையினர் கைது செய்தனர்.
 
திண்டிவனம் அருகே உள்ள மொளசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. இவரது மகள் 14 வயதுடைய சசிரேகா. இவர் ஓமந்தூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
 
சில நாட்களுக்கு முன்ன்னர் சசிரேகாவிற்கு பிறந்த நாள் என்பதால் பெற்றோர் வாங்கிக் கொடுத்த தங்க சங்கிலி, கம்மல், வெள்ளிக் கொலுசு ஆகியவற்றை அணிந்து கொண்டு பள்ளிக்குச் சென்றாள்.
 
மாலையில் பள்ளி முடிந்து நீண்ட நேரமாகியும் சசிரேகா வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் சசிரேகாவை பல இடங்களில் தேனர் ஆனால் அவர் கிடைக்கவில்லை. பின்னர் அதே கிராமத்தில்  விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் சசிரேகா பிணமாகக் கிடந்தார்.
 
இதையறிந்து அங்கு வந்த கிளியனூர் காவல்துறையினர் சசிரேகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது அவர் அணிந்திருந்த நகைகள் காணாமல் போயிருந்தது. இதனால் சசிரேகாவின் பெற்றோர் தங்கள் மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக காவல்துறையினரிடம் புகார் செய்தனர்.
 
எனவே நகைக்காக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று சந்தேகித்த காவல்துறையினர் சசிரேகாவுடன் படிக்கும் சகதோழிகள் மற்றும் கிராம மக்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், சசிரேகாவுடன் அதே பள்ளியில் 10 ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவி ஒருவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதனால் அவர் மீது காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
 
இதைத் தொடர்நது, அவரிடம் காவல்துறையினர் திவிரமாக விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், சசிரேகா மீது இருந்த கோபத்தினாலும், அவர் அணிந்திருந்த நகைக்கு ஆசைபட்டும் அவரை கிணற்றில் தள்ளி கொலை செய்ததை அந்த மாணவி ஒப்புக்கொண்டார்.
 
இது குறித்து காவல்துறையினரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
 
நானும் அவளும் தோழிகளாக இருந்தோம். ஆனால் சில மாதங்களாக சசிரேகா, எனது குடும்பத்தை பற்றி அவதூறாகப் பேசிவந்தார். இதனால் எனக்கு அவள் மீது கடுமையான கோபம் ஏற்பட்டது.
 
சம்பவத்தன்று சசிரேகா பள்ளிக்கு நகைகள் அணிந்து வந்தார். அந்த நகைகள் மீது எனக்கு ஆசை ஏற்பட்டது. நகையை பறிப்பதற்காக அவளை பள்ளி நேரத்தில் யாருக்கும் தெரியாமல் ஏமாற்றி வெளியே அழைத்து வந்தேன்.
 
பின்னர் அதே பகுதியில் உள்ள வயல்வெளியில் சசிரேகாவுடன் நான் பேசிக் கொண்டிருந்தேன். சசிரேகாவிடம் உனது நகை அழகாக இருக்கிறது. அதனை என்னிடம் தா, நான் போட்டுப் பார்த்துவிட்டு தருகிறேன் என்றேன். அதை நம்பி சசிரேகா நகையை கழற்றி கொடுத்தார்.
 
சிறிது நேரம் கழித்து அங்கு பயிரிடப் பட்டிருந்த வேர்க்கடலையை சாப்பிடுவதற்காக பறித்தோம். அதை சுத்தம் செய்வதற்காக அங்குள்ள தரைக் கிணற்றில் இறங்கினோம். சசிரேகாவிடம் வேர்க் கடலையை சுத்தம் செய்யும்படி கூறினேன். கிணற்று தண்ணீரில் சசிரேகா சுத்தம் செய்து கொண்டிருந்த நேரத்தில் அவளை நான் கிணற்றில் தள்ளினேன்.
 
சிறிது நேரத்தில் அவள் தண்ணீரில் மூழ்கி இறந்தாள். உடனே சசிரேகாவின் நகைகளை யாருக்கும் தெரியாமல் என் வீட்டிற்கு கொண்டு சென்று மறைத்து வைத்தேன். இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
 
இந்நிலையில், அந்த மாணவியின் வீட்டிற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அவர் மறைத்து வைத்திருந்த நகைகளை பறிமுதல் செய்தனர். மேலும் அந்த மாணவியிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.