எந்த நாடும் இப்படி மக்களை கொடுமை படுத்தாது: திருமா ஆதங்கம்!
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பெட்ரோல், டீசல் விலையை கண்டித்து டிவிட்டரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் கோரோனா பாதிப்பினால் பொருளாதாரம் சரிவை சந்தித்துள்ள நிலையில் தமிழக அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை உயர்த்தியுள்ளது. இதனால் பெட்ரோலுக்கான வரி 28லிருந்து 34 சதவீதமாகவும், டீசல் மீதான வரி 20லிருந்து 25 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
மே 4 முதல் அமலுக்கு வந்த இந்த வரி உயர்வால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரத் தொடங்கியுள்ளது. இன்று பெட்ரோல் விலை நேற்றைய விலையிலிருந்து 43 காசுகள் உயர்ந்து 79.96 ரூபாய்க்கும், டீசல் விலை 51 காசுகள் உயர்ந்து 72.69 ரூபாயாகவும் விற்பனையாகி வருகிறது.
இதனைகண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் டிவிட்டரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பெட்ரோல், டீசல் விலை உயர்வால் கிட்டும் வருமானத்தை மக்கள் நலன்களுக்குப் பயன்படுத்துவதில்லை. மாறாக, கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன்களைத் தள்ளுபடி செய்வதை ஈடுசெய்யவே பயன்படுத்திக் கொள்கிறது மோடிஅரசு. இது கார்ப்பரேட்களின் நலன்காக்கும் அரசே என பதிவிட்டுள்ளார்.
மேலும், கடந்த 8 நாட்களில் லிட்டருக்கு சுமார் ஐந்து ரூபாய் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து இருக்கிறது. கொரோனா பேரிடர் நேரத்தில் மக்களை கசக்கி பிழியும் விதமாக இந்த விலை உயர்வை மத்திய, மாநில அரசுகள் நடைமுறைப்படுத்துவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கையை எடுக்க மத்திய அரசையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறோம்.
உலகில் எந்த ஒரு நாடும் தனது குடிமக்களை பேரிடர் காலத்தில் இப்படி கொடுமைப்படுத்தவில்லை. இந்த நிலை தொடர்ந்தால் மக்கள் கிளர்ந்தெழுந்து போராடுவதைத் தடுக்க முடியாது என்பதை ஆட்சியாளர்களுக்கு சுட்டிக்காட்டுகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.