வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 17 பிப்ரவரி 2023 (12:27 IST)

திருட போன இடத்தில் பிரியாணி சாப்பிட்டு அயர்ந்து தூங்கிய திருடன்! – தட்டி எழுப்பிய போலீஸ்!

சிவகங்கை மாவட்டத்தில் வீடு ஒன்றில் திருட சென்ற திருடன் பிரியாணி சாப்பிட்டு விட்டு நன்றாக தூங்கி போலீஸாரிடம் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள நடுவிக்கோட்டையை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் காரைக்குடியில் தங்கி தொழில் செய்து வரும் நிலையில் வாரம் ஒருமுறை நடுவிக்கோட்டைக்கு சென்று வருவது வழக்கம்.

வெங்கடேசன் வீட்டில் இல்லாததை நோட்டம் விட்டு வந்த திருடன் ஒருவன் ஆள் இல்லாத சமயம் வீட்டின் மேற்கூரை ஓடுகளை பிரித்து உள்ளே நுழைந்துள்ளான். அங்கிருந்த பித்தளை, சில்வர் பாத்திரங்கள், மின்விசிறி உள்ளிட்ட பல பொருட்களை அவன் திருடியுள்ளான். திருடிய அசதியில் இருந்த திருடன் தான் கொண்டு வந்த மதுவை அருந்திவிட்டு, பிரியாணி சாப்பிட்டுள்ளான். பின்னர் அசதியில் அப்படியே அங்கிருந்த கட்டிலில் படுத்து உறங்கியுள்ளான்.

காலையில் அக்கம்பக்கத்தினர் வெங்கடேசன் வீட்டு ஓடு பிரிக்கப்பட்டிருப்பதை கண்டு போலீஸாருக்கும், வெங்கடேசனுக்கும் தகவல் சொல்லியுள்ளனர். போலீஸார் வீட்டை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது திருடிய பொருட்களை சுற்றி அடுக்கி வைத்துவிட்டு திருடன் அசந்து தூங்கியிருந்துள்ளான். போலீஸார் அவனை எழுப்பியுள்ளனர்.

தூக்கம் கலைந்த திருடன் போலீஸை கண்டு அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளான். அவனை கைது செய்து போலீஸார் விசாரித்ததில் திருடன் வெட்டுக்குளம் பகுதியை சேர்ந்த சுதந்திர திருநாதன் என தெரியவந்துள்ளது. திருட வந்துவிட்டு தூங்கி போலீஸில் மாட்டிய சம்பவம் அப்பகுதியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K